ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக.,வில் ஏற்பட்ட பிளவினால் ஓ பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்கள் நடந்தன.
செய்திகளை கவனிக்காதவர்கள் கூட, தமிழக அரசியலில் என்ன தான் நடக்கின்றது என தெரிந்துகொள்ளும் எண்ணத்தில் செய்திகளை கவனிக்கத் தொடங்கினர். சசிகலா அணியில் இருந்து அனைத்து எம்.எல்.ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு வருவர் என ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து தெரிவித்தனர். கடைசியில் சசிகலா அணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
இவ்வளவு பெரிய அரசியல் மாற்றங்களின் போது சசிகலா அணிக்கு குரல் கொடுத்துக்கொண்டே இருந்தவர்கள் தான் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி மற்றும் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பா வளர்மதி.
இந்நிலையில் தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் பணபரிவர்த்தனை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் சி.ஆர். சரஸ்வதி மற்றும் பா.வளர்மதி ஓபிஎஸ் அணிக்கு தாவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி தாவினால், சசிகலா அணியின் நடந்த சில மர்மங்கள் ஓபிஎஸ் அணி சார்பில் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.