ப.பாண்டி- விமர்சனம்

power-paandi-movie-review
படம் – ப.பாண்டி

இயக்கம்- நடிகர் தனுஷ், இசை- ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு- வேல்ராஜ், தயாரிப்பு- வுண்டேர்பார் பிலிம்ஸ் கம்பெனி

நட்சத்திரங்கள்- ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன், தனுஷ், ரின்சன், டிடி, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வித்யுலேகா ராமன், பாலாஜி மோகன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எல்லாருடைய வாழ்க்கையில வரும் முதல் காதல் யாராலும் மறக்க முடியாது. அது கல்யாணம் ஆன பிறகு கூட அது முள் போல பாய்ந்து கொண்டே இருக்கும்.

அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும் மதிக்கும் பெற்றோர் சிலர் அன்பு வைத்த பிள்ளைகளை பிரிச்சு வைப்பார்கள். பின்னர் நமக்கு வேறு திருமணம் ஆனாலும் கூட முதல் காதல் மறக்க முடியாது. அது சாகும் வரை நம் நினைவை விட்டுப் போகவே போகாது. மறந்தால் அது காதல் அல்ல.

இப்படத்தில் ஓய்வு பெற்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக நடித்துள்ளார். இந்த கதையில் 64 வயதுடைய ராஜ்கிரண் தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங் மற்றும் பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். பக்கத்து வீட்டில் தன் நட்பாக இருக்கும் 20 வயது பையனுக்கு அடிக்கடி அறிவுரை கூறுவார். அவனிடம் தானும் காதலித்ததாகவும், அந்த முதல் காதல் மறக்க முடியாதது என்பார். தன்னுடைய உடல்தேகத்தை 60 வயதிலும் கம்பீரமாக வைத்து வரும் அவர், அடிக்கடி சமூகத்தில் நடக்கும் ஒரு சில பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுத்து வர இதனால் அடிக்கடி போலீஸ் அவர்களுடைய வீட்டிற்கு வந்து, இவருக்கு ஏன் இந்த வேலை என கூறி எச்சரிக்கின்றனர். இது அவருடைய மகன் பிரசன்னாவுக்கு அடிக்கடி மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஓரு நாள் வேறு ஒரு பிரச்சனையால் இவரை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட இந்த நிகழ்வு மகன் அப்பாவிடம் வெறுப்பாகப் பேச வைக்கிறது.

60 வயதான ஒருவர் தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்கிறார். கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனம்போகும் போக்கில் எங்கே போகிறோம் என்று தெரியாமல் போகும் போது வழியில் அவரைப்போல் பிரயாணித்துக்கொண்டிருக்கும் சிலர் அவருடைய முதல் காதலை ஞாபகப்படுத்துகிறார்கள். அந்த காதலி (ரேவதி) இப்போது எங்கே இருக்கிறார் என்பதையும் தெரிந்துக்கொண்டு தன் முதல் காதலியைத் தேடிப் போகிறார். அவரைச் சந்தித்தாரா இல்லையா?, மீண்டும் தன் குடும்பத்துடன் சேர்ந்தாரா? என்பதே பவர் பாண்டி படத்தின் மீதிக் கதை.

பவர் பாண்டியாக ராஜ்கிரண், வழக்கமான பாணிகளில் இருந்து விலகி அவருக்கு உண்டான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜ்கிரண் பவர் பாண்டி என்ற சண்டைக் கலைஞராக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் தன்னுடைய மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் இருக்கும் உறவையும், தன் முதல் காதலியை சந்திக்கும் போதும் அதிலும் தன் முதல் காதலிக்கு சாட்டிங்கில் குறுந்செய்தி அனுப்பும் போது அவரிடம் வெளிப்படும் அந்தக் காதலும், பின்னர் க்ளைமாக்ஸில் தன் காதலியை பிரிந்து மீண்டும் குடும்பத்துடன் பயணிக்கும் காட்சியில் தூள் கிளப்பியுள்ளார். ‘பவர் பாண்டி” படம் ராஜ்கிரண் சாரை சரியாக போய் சேர்ந்திருக்கிறது.

ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா, இந்தக் கால ஐடி இளைஞர்களின் மிஷின் போன்ற வாழ்க்கை மற்றும் உணர்வை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். யதார்த்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.

பிரசன்னாவின் மனைவியாக சாயா சிங், பக்கத்து வீட்டுப் பையனாக ரின்சன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் ராஜ்கிரணின் பேரனாக மாஸ்டர் ராகவன், பேத்தியாக சவி ஷர்மா மனதில் நிற்கிறார்கள்.

பல வருடங்கள் கழித்து திரையில் ராஜ்கிரணின் முதல் காதலியாக ரேவதி கூலாக நடித்து சிறப்பித்துள்ளார். ராஜ்கிரண்-ரேவதி இருவரின் லவ் போர்ஷன்கள், முதல் காதலில் தோற்றுப் போனவர்களுக்கு தங்கள் முதல் காதலியை நிச்சயமாக மீண்டும் ஞாபகப்படுத்தும்.ராஜ்கிரண் ரேவதியிடம் இறுதிக்காட்சியில் விடைபெற்று செல்லும்போது காதலுக்காக இரண்டாவது முறை வீட்டை விட்டு வருவதாக கூறும் போது பிரஷ்ஷாக இருக்கிறது இந்த முதல் காதல்.

ராஜ்கிரணின் இளமைத் தோற்றத்தில் என்ட்ரீ கொடுத்த தனுஷ், அவருக்கான பாணியில் கலக்கி, மடோனா செபாஸ்டியனுடன் ரொமான்ஸ் காட்சியிலும் கலக்கி இருக்கிறார். காதலி மடோனா தன்னை விட்டுப் பிரியும் போது அவர் கண்கலங்கி நிற்கும் காட்சி அருமை.

ஷான் ரோல்டன் இசையும், பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. தனுஷின் எதிர்பார்ப்பை ஷான் ரோல்டன் பூர்த்தி செய்திருக்கிறார்.

வேல்ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்ததுடன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதைக்கு ஏற்றார்போல் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.

நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து பவர் பாண்டி படத்தின் மூலம் களமிறங்கியிருக்கிறார். பவர் பாண்டி படத்தின் மூலம் இத்தனை வருட காலம் வேறு ராஜ்கிரணாக இருந்த அவரை முற்றிலும் மாற்றி புதிய ராஜ்கிரணை காட்டியுள்ளார். நடிப்பைத் தாண்டி பாடல் பாடுவது, பாட்டு எழுதுவது என புதுப் புது பரிமாணமெடுத்த தனுஷ், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இப்போது பவர் பாண்டி படம் மூலம் ஒரு இயக்குநராகவும் தேறிவிட்டார் நடிகர் தனுஷ்.

மொத்தத்தில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பவர் பாண்டி எனும் ப.பாண்டி, பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து ஒரு பாஸிடிவான படத்தைத் தந்திருக்கிறது. முதல் காதல் தனிமையான முதுமைக்காலத்தில் ஞாபகப்படுத்தும் வகையில் அமைத்து சிறப்பாக இயக்கி தயாரித்து இருக்கிறார் தனுஷ்.

மொத்தத்தில் இந்த ப.பாண்டி ஒரு முழுமையான பவர் பாண்டிதான் இந்த படத்தை திரையரங்குகளில் சென்று கண்டுகளியுங்கள் குடும்பத்துடன்.

Leave a Response