முறைகேடாக சொகுசு கார்களை வாங்கி குவித்த பட்டதாரி இளைஞர் கைது!

arshavardhan
போலி ஆவணங்கள் மூலமாக சொகுசு கார்களை வாங்கி குவித்த பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஆஸ்திரேலியாவில் எம்பிஏ படித்தவர். விலை உயர்ந்த சொகுசு கார்கள் வாங்க ஆசைப்பட்ட இவர் நூதன முறையில் பல மோசடிகளை செய்துள்ளார்.

மேலும் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் பெரிய வீடுகளை வாடகைக்கு எடுத்த இவர், வீட்டின் உரிமையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். பின்னர் வீட்டு உரிமையாளர்களிடம் அதிக பணம் தருவதாக வீட்டை குத்தகைக்கு எடுத்து, வங்கிகளில் அதிக கடன் பெற்று தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வங்கிகளால் ஹர்ஷ்வர்தனை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு தன் வழக்கு சம்பந்தமாக ஹர்ஷ்வர்தன் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் ஹர்ஷ்வர்தன் ரெட்டியை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்துக்கு வந்த மசேரட்டி காரையும் பறிமுதல் செய்தனர். மோசடி செய்த பணத்தில் பெராரி, மசேரட்டி, ஆடி போன்ற விலை உயர்ந்த கார்களை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. பெராரி மற்றும் ஆடி கார்களுக்கு மாதத்தவணை கட்டத்தவறியதால் வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன. தற்போது பயன்படுத்தி வந்த மசேரட்டி காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளில் கார் மற்றும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு இரண்டு பாஸ்போர்ட் மற்றும் மூன்று பான் கார்டுகளை ஹர்ஷ்வர்தன் பயன்படுத்தி வந்துள்ளார். வங்கியில் கடன் பெற்ற உடனேயே இருப்பிடத்தை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Leave a Response