“நைட் ஆப் மால்டா ஜெருசலேம்” அமைப்பு வழங்கிய “செவாலியே” விருதை பெற்றுள்ள இயக்குநர் யுரேகா!..

yueraka-1
“மதுரை சம்பவம்”, “தொப்பி”, “சிவப்பு எனக்கு பிடிக்கும்” போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் யுரேகா.

இவருடைய இயற்பெயரை ஜோசப் மோகன்குமார். இவர் கடந்த 32 வருடங்களாக இலக்கிய மற்றும் ஊடகப் பணிகளை செய்து வருகிறார்.

1995-ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில் புதுக்கவிதைக்கான தமிழக அரசின் முதற்பரிசை பெற்றுள்ளார். இவரது கவிதைகள் மற்றும் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்தியா, மற்றும் பல்வேறு உலக நாடுகளில் உள்ள இறையியல் பல்கலைக் கழகங்கள், மற்றும் கல்லூரிகளிலும் பாடத் திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இறையியல் கல்லூரிகள் இவரை பாராட்டி கௌரவ பேராசிரியராக நியமித்துள்ளன. தற்போது, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நவீன கோட்பாடுகளுடன் எழுதினார். இந்த நூல் சமீபத்தில், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்துப் பணிக்காக ஆர்தடாக்ஸ் தலைமை திருச்சபையை சார்ந்த ‘நைட் ஆப் மால்டா ஜெருசலேம்’ என்ற கிறஸ்துவ அமைப்பு கடந்த 13-ம் தேதி, இவருக்கு ‘நைட் ஆப் கிரேஸ் செவாலியே’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பிரான்ஸ் நாடு வழங்கும் ‘செவாலியே’ விருதும், நைட் ஆப் மால்டா ஜெருசலேம் அமைப்பு வழங்கும் ‘செவாலியே’விருதும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் ‘செவாலியே விருதை’ பெரும் முதல் தமிழர் மற்றும் பத்திரிக்கையாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் முதல் முறையாக இந்த விருதை பெறும் இயக்குநரான யுரேகா என்ற ஜோசப் மோகன்குமார் தனது இலக்கிய பணிக்காக 6 பல்வேறு பல்கலைகழகங்களில் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விருது பெற்றது தொடர்பாக யுரேகா பேசுகையில், “இந்த விருது பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதுக்கு முன்பாகவே கி.பி-1048-லிருந்து சுமார் 960 வருடங்களுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது.

துவக்கத்தில் கிறித்துவப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் போரில் ஈடுபட்ட ராணுவ உயரதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. பின்பு போப்பாண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அரச குடும்பத்தினரின் பெருமைக்காக அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பின்பு ஒரு கட்டத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கலைஞர்கள், அறிஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. கிறித்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது இடைக்காலத்தில் மாறி மற்ற மதத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதினை பெறும் முதல் இந்தியனும், முதல் தமிழனும் நான்தான் என்றும் எனது இலக்கியப் பணி மற்றும் திரைப்பட படைப்பாற்றலுக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதை எனது வாழ்க்கையில் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் பாதிரிமார்கள் குரு பீடத்தில் படித்தவன். பாதிரியாராகவும் இருந்திருக்கிறேன். பத்திரிகையாளராக.. பத்திரிகை நடத்துபவராகவும் இருந்திருக்கிறேன். இப்போது இயக்குநராகவும் மாறியிருக்கிறேன்.

இது போன்ற விருதுகள் எனது வளர்ச்சிக்கு உரம் போட்டு வளர்ப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்..” என்றார்.

இவரது கடைசி படமான ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தில் சென்னைக்கு விபச்சார விடுதி அவசியம் வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியது. இது பற்றி அவர் பேசுகையில், “இப்போது தினம்தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. சென்னைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேலைக்காக வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களது காமத்தின் வடிகாலுக்கு ஏற்ற அமைப்பில் சென்னை இல்லை. இதனால்தான் இவர்களது காமம் தலைக்கேறி அது வன்முறையிலும், பாலியல் பலாத்காரத்திலும் போய் நிற்கிறது.

சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் விடுதிகள் அமைக்கப்பட்டால் நிச்சயமாக பாலியல் குற்றங்கள் குறையும். இதனால் சிறு குழந்தைகள்கூட பாதிக்கப்படும் இந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம்..” என்றார்.

“விபச்சார விடுதிகளுக்கு அனுமதியளித்தால் அது டாஸ்மாக் கலாச்சாரம்போல இதுவரையிலும் போகாதவர்களைக்கூட போக வைத்துவிடுமே…?” என்ற கேள்விக்கு.. “நிச்சயமாக அதுபோல் நடக்காது. பாலியல் பெண்களைத் தேடிச் செல்லும் குணமுடையவர்கள் மட்டுமே அங்கே செல்வார்கள். அது சொற்பந்தான்.. மற்றவர்கள் நிச்சயம் போகவே மாட்டார்கள்..” என்றார் உறுதிபட..!

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் குடியையே பார்த்திராத மூன்று தலைமுறையையே குடியால் அழித்த பெருமை நமது தமிழகத்தை ஆண்ட அரசியல் வியாதிகளுக்கு உண்டு என்பதால் இதற்கும் அனுமதி கொடுத்தால் தமிழ்நாடே சீர்கெட்டுப் போய்விடும் என்பதுதான் உண்மை. இதை இவர் புரிந்து கொள்ள வேண்டுமே.

Leave a Response