குடிநீர் பஞ்சத்துக்கு எதிராக அறப்போராட்டம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு கடிதம்!..

tmk stalin
தற்போது தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராகவும் நாம் அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,”ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே தமிழகத்தில் பொது விநியோக முறை
சீரழிந்துவிட்டது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழகம் இணைந்த பிறகு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகள் தொடர்ந்து இயங்குமா என்ற அச்சம் ஏழை, நடுத்தர மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையை மாற்றி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், சிறையில் உள்ள குற்றவாளியின் வழிகாட்டுதலில் நடக்கும் அதிமுக அரசு, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில் தான் அக்கறை காட்டுகிறது. மக்களைப் பற்றி அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை.ரேஷன் கடைகளில் பொருள்கள் தாராளமாக இருக்கின்றன என்கிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர். பொருள்களுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதால் சில நாள்களில் அவை வந்துவிடும் என்கிறார் உணவு அமைச்சர். ரேஷன் கடைகளில் விரைவில் நிலைமை சீராகும் என்கிறார் முதல்வர். இப்படி முதல்வரும், அமைச்சர்களும் முரண்பட்ட வகையில் கருத்துககளை தெரிவித்து வருகின்றனர்.

மக்களை வாட்டி வதைக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நேற்று (மார்ச் 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.ரேஷன் கடைகள் முன்பு அறப்போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் ஆதரவுடன் திமுக நடத்திய இந்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான திமுகவின் அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் குறிப்பாக பெண்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. போராட்டத்தின் நோக்கங்கள் வெற்றி அடையும் வரை நமது பணி ஓயப்போவதில்லை.’தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராகவும் நாம் அறப்போராட்டம் நடத்த வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக பொதுமக்களுடன் இணைந்து போராடி வெற்றி பெறுவோம்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார்…

Leave a Response