இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!

resaan
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை, முறையாக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் முன்பாக இன்று திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. சமீப காலமாக ரேஷன் கடைகள் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு சரிவர விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் முறையிட்டால்,பொருட்கள் பற்றாக்குறை என அவர்கள் காரணம் சொல்வதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் தனது தொகுதியான கொளத்தூர் பகுதியிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,அந்த கடைக்கு ரேஷன் பொருட்கள் சரிவர வருவதில்லை என்பதை ஆதாரத்தோடு நிரூபித்தார்.மேலும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர் ஒரு வாரத்திற்குள் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் சீராகவில்லை எனில் தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளின் முன்னர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து,இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.திமுக செயல் தலைவரான ஸ்டாலின்,தனது கொளத்தூர் தொகுதியில் உள்ள ரேஷன் கடையின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.

Leave a Response