அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிய ராஜன் இன்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த முடிவுகள் மற்றும் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை காலை 11 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பார். ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தரும்.
இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக, ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். பொதுச்செயலாளர் நீக்கப்பட்ட பிறகு அவைத் தலைவர், பொருளாளருக்குத் தான் அதிகாரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும். சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நடந்த விதி மீறலை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டள்ளது. 18-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் வெற்றி பெற்று மறைமுக வாக்கெடுப்பை கொண்டு வருவோம்.
எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சி மீண்டும் பேசும். தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும்.
பொதுச்செயலாளர் பதவி எம்.ஜி.ஆர். வகுத்தபடி அனைத்து அடிப்படை உறுப்பினர்களின் வாக்குகள் கேட்டு நடத்த வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தல் நீதிமன்ற உத்தரவு படியோ, தேர்தல் ஆணைய உத்தரவு படியோ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெகுவிரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் ஆவல் ஆகும்.