மாநகரம் – விமர்சனம்

CqcmwOZVMAAq4f4

மாநகரம்

எழுத்து இயக்கம் – லோகேஷ் கனகராஜ்

இசை – ஜாவேத் ரியாஸ்

சந்தீப், ஶ்ரீ, ரெஜினா

இந்த மாநகரத்துல யாருக்காவது பிரச்சனைனா நாம கேட்டுருக்கோமா? நாம கேட்டாத்தான் நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது மத்தவங்க கேட்பாங்க! இதைத்தான் மாநகரம் படம் சொல்கிறது.

நான்கு பிரச்சனைகள், நான்கு கதைகள் மாநகரின் ஒர் இரவில் சங்கமிக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு மாநகரம் தரும் தீர்வு தான் கதை. ஶ்ரீ திருச்சியிலிருந்து சென்னைக்கு ஐடி கம்பெனிக்கு வேலை தேடி வருகிறார். எதிர்பாராத பிரச்சனையில் தன் சர்டிபிஃகேட்டுகள் அனைத்தையும் தொலைத்துவிட்டு தவிக்கிறார். சந்தீப் ரெஜினாவை காதலிப்பதையே வேலையாய் பார்க்கிறார். சார்லி ஒரு காரை வில்லனிடம் பைனான்ஸில் எடுத்து தன் வாழ்க்கையை மாநகரில் தொடங்குகிறார். ராம்தாஸ் கும்பல், வில்லன் குழந்தையை தவறுதலாக கடத்தி விட்டு தவிக்க்கிறது. இந்த நான்கு பிரச்சனைகளுக்கும் இந்த மாநகரம் தரும் தீர்வுதான் படம்.

மிகத் தெளிவான திரைக்கதை. நான்கு கதைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக ஆரம்பித்து எந்த குழப்பமும் இல்லாமல் பரபர வேகத்துடன் இறுதிவரை பயணிக்கிறது. அத்தனை கேரக்டர்களையும் படத்தின் முதல் காட்சியிலேயே ஆரம்பித்து பிரச்சனையும் சொல்லிவிடுகிறார் இயக்குநர். திரைக்கதையை மிகத் தெளிவாக திறமையாக கையாண்ட விதத்தில் கவர்கிறார் புதுமுக இயக்குனர் லோகேஷ் . முதல் படம் என்றே நம்ப முடியாத அளவு அவ்வளவு கச்சிதம். ஒவ்வொருவரின் தன்மை அவர்களின் கதைகளை தெளிவாக்கியதன் மூலம் படத்தின் பயணம் எங்கும் தடையில்லாமல் செல்கிறது. சமீப கால படங்களில் மிகச் சுவாரஸ்யமான படமாக வந்திருக்கிறது மாநகரம்.

ஶ்ரீ நடிகர் என்பதை மறக்கடித்து விடுகிறார். அவரின் திறமை அவருக்கான இடத்தை கண்டிப்பாக பெற்றுத்தரும். ரெஜினாவுக்கான இடம் கதையில் குறைவென்றாலும் அவர் வரும் இடங்களில் மனதை அள்ளுகிறார். சந்தீப் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவிற்கான அடித்தளத்தை இந்தப்படத்தில் உருவாக்கியிருக்கிறார். சார்லி மகா கலைஞன் என்பதை நிரூபிக்கிறார். “நாம கேட்டுருக்கோமா” எனச் சொல்லுமிடத்தில் படத்தின் மொத்த விஷயத்தையும் சொல்லி மனதை அள்ளுகிறார். ராம்தாஸ் படத்தின் மிகப்பெரிய காமெடி ரிலீஃப். மும்பை எக்ஸ்பிரஸ் கமலின் எபிஸோடை பிரதியெடுத்து செய்திருக்கிறார்கள். அது நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

சாலைகள், ஜன நெருக்கடி, வாகனங்கள், ஐடி கம்பெனி, பஸ், போலீஸ் ஸ்டேஷன், ஆளில்லா இரவின் தெருக்கள் ஆர்ட்டும் ஒளிப்பதிவு சென்னையை உண்மையாக கண்முன் நிறுத்துகிறது. பரபர வேகத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது இசை. எடிட்டிங்கிறகு வேலை இல்லாமல் பறந்திருக்கிறது படம். சரியான திட்டமிடலில் எந்தக் குறையும் இல்லாமல் ஆசர்யப்படுத்துகிறார்கள்.

இந்த நகரம் மட்டுமல்ல உலகம் முழுதுமே அன்பை தந்தால் அது திரும்பி வரும் புன்னகை எல்லோரிடமும் பரவும் எனச் சொல்லவேண்டிய இடத்தில் சேர்ந்து திருப்பி அடித்தால் வாழலாம் எனச் சொல்வது நெருடல். நான்கு பிரச்சனைக்கான முடிவில் எந்த அறமும் இல்லை. இதைத் தவிர ஒரு முழு நிறைவான படமாக கவர்கிறது மாநகரம்.

Leave a Response