சென்னையின் பெருமையை சொல்லுமா ‘மாநகரம்’ திரைப்படம்?

Maanagaram Press Meet
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மார்ச் 10’ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் “மாநகரம்”. சந்தீப், ஸ்ரீ, ரெஜினா கசான்ட்ரா, சார்லி, முனீஸ் காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இப்படத்தின் சில காட்சிகளும், பாடல்களும் திரையிடப்பட்டன. இப்படத்தில் சென்னையில் நடக்கும்படியான சில வன்முறை காட்சிகள் இருந்தன. அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் படக்குழுவினரிடம் கேட்கப்பட்டது. கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சந்தீப் சொன்னதாவது, திரையிடப்பட்ட சில காட்சிகளில் வன்முறை தெரியலாம் ஆனால் முழுப்படத்தை பார்த்தால் தெரியும் ‘சென்னையின் பெருமையை பற்றி பேசும் படமாக இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பேசியவையில் சில உங்களுக்காக:

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தீப் பேசியது :- எல்லோரும் தமிழுக்கு நான் மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் சென்னை பையன் , என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில் தான் உள்ளது. என்னுடைய அம்மா , அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே சென்னையில் தான் இருக்கிறார்கள். நான் வேலை பார்ப்பது தான் ஹைதராபாத்தில். நான் survivalலுக்காக தெலுங்கில் நடிக்கிறேன் , தமிழில் நடிக்கும் போது கதையை தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். இப்போது நான் நடித்துள்ள மாநகரமும் , அடுத்து வரவிருக்கும் மாயவன் போன்ற படங்களும் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் புதுமையான ஒரு படைப்பாக இருக்கும். நான் நேற்று தான் மாநகரம் படத்தை பார்த்தேன். மாநகரம் சென்னையின் பெருமையை பற்றி பேசும் படமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும் போது சென்னையை பற்றி நீங்கள் அனைவரும் பெருமையாக எண்ணுவீர்கள் என்பது தான் உண்மை. எனக்கு இங்கே உள்ள உண்மையான நண்பர்களில் மிகசிறந்த நண்பர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள். மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்ன போது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் தயாரிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். நம்மிடம் பணம் இல்லையே எப்படி தயாரிக்க போகிறோம் என்று யோசித்து கொண்டு இருந்த போது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறேன் என்று என்னிடம் கூறினார் என்றார் சந்தீப்.

நடிகர் ஸ்ரீ பேசியது . இது வரை நான் நடித்த அனைத்து படங்களுக்கும் நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இந்த திரைப்படத்துக்கும் நீங்கள் அதே போல் ஆதரவை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் மாநகரம் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கதை சார்ந்த முக்கிய விஷயங்களை வெளியே வந்து பிறரிடம் பகிர வேண்டாம் என்ற வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் நடிகர் ஸ்ரீ.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியது :- மாநகரம் திரைப்படம் நிச்சயம் அனைவருக்கும் மனதார பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். எப்போதும் எங்கள் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் மாநகரம் திரைப்படத்துக்கும் கொடுக்க வேண்டும். படத்தை அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்து பைரசியை ஒழிக்க உதவ வேண்டும். காதலில் காத்திருப்பது மகிழ்ச்சியான தருணம் , சினிமாவில் காத்திருப்பது அப்படி அல்ல என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது :- இது வரை மாநகரம் திரைப்படத்தை பார்த்த அனைவரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. படத்தை பார்த்த பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் வெளியிட்ட விமர்சனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அவர் அதை வெளியிட்டதை தொடர்ந்து பிரபலங்கள் பலர் எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வருகிற மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் மாநகரம் திரைப்படம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.

Leave a Response