ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

jallikattu-c-reuters-mainஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரினர். தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என திட்டவட்டமாக கூறியுள்ளது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல தீர்ப்பு வரும் முன் அவசர சட்டம் கொண்டு வர இயலாது என மத்திய அரசும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றமும் தற்போது விரைந்து தீர்ப்பு வழங்க முடியாது என கூறியுள்ளது. இதனால் சட்டரீதியாக அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவது இந்த ஆண்டும் கனவாகவே முடிந்து விடும் என்றே தெரிகிறது.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் என மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response