துருவங்கள் பதினாறு திரை விமர்சனம்

d16ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். காலையில் இவருக்கு ஒருவன் ரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் தகவல் வருகிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க தொடங்குகிறார் ரகுமான். புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் ரகுமானுக்கு உருதுணையாக இருக்கிறார்.

இறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

கதையை எவ்வளவு விறுவிறுப்பாக கொண்டுபோக முடியுமோ அவ்வளவு விறுவிறுப்பாக கொண்டுபோய் வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

ரகுமான் தான் ஹீரோ. விசாரணை மேற்கொள்ளும் அவர், தனது கீழ் பணிபுரியும் காவலர்களை நடத்தும் விதம், குற்றவாளிகளை விசாரிக்கும் விதம், அனைத்துமே புது வித போலீஸ் கதாபாத்திரத்தை பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இரவு காட்சிகளில் கட்சிதமான லைட்டிங்கை பொறுத்தி காட்சிகளை தெளிவாக காட்டியிருக்கிறார்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் என்பதைக் காட்டிலும், படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறது. அதேபோல், படத்தொகுப்பு, சவுண்ட் டிசைன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்கள் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது.

எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ அனைவரும் பார்க்க வேண்டிய வெற்றிப் படம்.

Leave a Response