வீரசிவாஜி- திரை விமர்சனம்


vikram-prabhu-s-veera-sivaji-first-look-2-1000x509விக்ரம் பிரபு பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார். இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், சொந்த அக்கா போல் பாத்துக்கொள்கிறார் வினோதினி.

ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாத நேரத்தில், யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் ஜான் விஜய் அறிமுகம் கிடைக்கின்றது. அவர் குறைந்த பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றி செல்கிறார்.

ஏமாற்றிய ஜான் விஜய்யை கண்டுபிடிக்கச் செல்கிறார் விக்ரம் பிரபு. அதன் பிறகு அந்த கும்பலை கண்டுப்பிடித்தாரா, குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா என்பதே மீதிக்கதை.

விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான் என்று சொல்லலாம். ரமேஷ் – சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.

படத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. வேகவேகமாக செல்லும் திரைக்கதையில் இடைவேளை வர, அடுத்து என்ன என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.


 

Leave a Response