நடிகர்கள்: கவுதமாக அதர்வ, அணுவாக கேதரின் தெரேசா, அதர்வ’வின் தந்தை ராமலிங்கமாக ஆடுகளம் நரேன், துரா சர்காராக தருண் அரோரா, ஹெட் கான்ஸ்டபில் கணபதியாக பாக்யராஜ், மனோபாலா, அதர்வ’வின் நண்பர்களாக கருணாகரன், சுந்தர் ராம், கும்கி அஷ்வின் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா பார்த்துக்கொள்ள, ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை புவன் ஸ்ரீநிவாசன் செய்ய, ஆக்ஷனை திலிப் சுப்ராயன் இயகியுள்ளார். பாடல்களை புலமைபித்தன், மதன் கார்கி மற்றும் நவீன்.B எழுதியுள்ளனர். T.N.சந்தோஷ் அவர்கள் இயக்க “V கிரியேஷன்ஸ்” சார்பாக கலைபுலி S.தாணு தயாரித்துள்ளார்.
கதை: போலி கல்வி சான்றிதழ்கள் புழக்கத்தை கதையின் நாயகன் எவ்வாறு முற்றிலுமாக ஒழிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
கவுதம் தன்னுடைய ஊரில் ஒரு பிரபலமற்ற தொலைகாட்சியில் பணிபுரிபவர். அவருடைய ஆசையோ BBC தொலைக்காட்சி சானலில் பணிபுரியவேண்டும் என்பதுதான். பல முறை முயற்சி செய்தும் அதில் தோல்வியடைந்து, தூர்தர்ஷன் சானலில் செய்தி வாசிப்பாளரான பணிபுரியும் அவருடைய தந்தையிடம் ஒவ்வொரு முறையும் வாங்கி கட்டிகொண்டது தான் கவுதமுக்கு மிச்சம்.
ஒரு கட்டத்தில் கவுதம் ஆசைப்பட்ட BBC சானலில் அவருக்கு வேலை கிடைக்கிறது. அதற்க்கான காவல் துறையின் பின்னணி சரிபார்ப்பில் கவுதம் BBC சானலில் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் கவுதம் மற்றும் அவரை போன்ற இளைஞர்கள் பலர் காவல் துறையினரிடம் சிக்கி கொள்கின்றனர். காவுதம் தந்தையின் நண்பர் மற்றும் காவலர் கதாபாத்திரத்தில் வரும் கணபதியுடன் இனைந்து எவ்வாறு அந்த போலி கல்வி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைவனை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பு. கவுதம் மற்றும் காவலர் கணபதியிடம் சிக்கும் வில்லன் துரா சர்காரை இவர்கள் என்ன செய்கிறார்கள், அவரால் இவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தான் மீத கதை.
கதையின் நடுவில் அவ்வப்போது கதாநாயகி அணுவின் அட்டன்டன்ஸ். கவுதம் அணுவின் ரொமான்ஸ் கச்சிதம். கவுதமின் தந்தை ராமலிங்கத்தின் கதாபாத்திரம், ஒரு மூத்த பத்திரிக்கையாளனின் அனுபவத்தை நன்கு சுட்டிக்காட்டுகிறது. கவுதமின் நண்பர்கள் கருணாகரன், சுந்தர் ராம் மற்றும் அஷ்வினின் கதாபாத்திரங்கள் அளவோடு பயணிக்கிறது.
கவுதமாக வரும் கதாநாயகன் அதர்வ’வின் உடல் தோற்றம் கண்டிப்பாக இன்றைய பெண்கள் மனதை கவரும் என்பதில் ஐயம்மில்லை. அதர்வ’வின் ஸ்போர்ட்ஸ்மேன் லுக், சேசிங் சீன்களில் அவருடைய ஓட்டம் அருமை. படத்தில் கேதரின் தெரேசாவின் பங்கு பெரிதாக சொல்லும்படி ஒன்றும் இல்லை என்றாலும் அவருடைய பார்வை இளம் பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. பாடல்களுக்கு ட்ரும்ஸ் சிவமணியின் இசை இனிமையாக இருப்பினும், பின்னணி இசையில் சில இடங்களில் எக்ஸ்ட்ரா சத்தம் கொஞ்சம் மைனஸ். புவன் ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பும், திலிப் சுப்ராயனின் ஆக்ஷன் சீன்களும் பாராட்டுக்குறியது. ஆங்காங்கே சில லாஜிக்கல் தவறுகள் இருக்கும், ஆனால் படத்தின் விறுவிறுப்பில் அந்த லாஜிக்கல் தவறுகள் பறந்துவிடுகின்றன. படத்தை விறுவிறுப்பாக இயக்கி கொண்டு சென்ற இயக்குனர் T.N.சந்தோஷுக்கு பாராட்டுக்கள்.
“கணிதன்” என்பவன் கணிப்பவன். மொத்தத்தில் “கணிதன்” ஒரு சமுக அக்கறை கொண்ட படம் என்று நீங்கள் கணித்துவிட்டு செல்லலாம்.