பாரதிராஜா – பாக்யராஜின் பாராட்டை பெற்ற பாபி சிம்ஹா படம்..!

சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த மூன்று பேரை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள கதை தான் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்கிற படமாக உருவாகியுள்ளது… ‘ஜிகர்தண்டா’ மூலம் சிறப்பு கவனம் பெற்ற பாபி சிம்ஹா இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது நண்பர்களாக நடிப்பு பயிற்சி கற்ற இன்னும் இரண்டு பேர் நடிக்கிறார்கள்.

சென்னையில் ஒன்றாக தங்கியிருக்கும், திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மூன்று பேச்சிலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப்படம். இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் மருதுபாண்டியன். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பாலாஜி தரணிதரனின் நண்பர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்தப்படத்தை பல இயக்குனர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மதுராஜ். இவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான். நல்ல படங்களை வெளியிடும் நோக்கத்துடன் ஒரு தயாரிப்பாளராக மாறி இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தை பார்த்த குரு- சிஷ்யரான பாரதிராஜாவும், பாக்யராஜும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்களாம். அதிலும் பாரதிராஜா இந்தப்படத்தை மூன்றுமுறை பார்த்தாராம். பாக்யராஜோ, இந்தப்படத்தை புதியவர் தான் இயக்கியுள்ளார் என்று சொன்னால் என்னால் நம்பமுடியவில்லை” என்று கூறியுள்ளார்.

இதுதவிர, பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன், ‘கற்றது தமிழ்’ ராம் உட்பட பல இயக்குனர்கள் பாராட்டினார்களாம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜன-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது..