“உண்ணாவிரதத்தால் ரஜினி பெயரை கெடுக்க மாட்டோம்” – வினியோகஸ்தர்கள் விளக்கம்..!

லிங்கா படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்று ரிலீஸ் செய்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

அதன்பின்பிறகு இந்த விவாகாரத்தை ரஜினியின் கவனத்துக்கு கொண்டு சென்றால் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நினைத்த வினியோகஸ்தர்கள், ஒருகாலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தலைவராக இருந்த சத்யநாராயணாவிடம் இதுபற்றி முறையிட, அவரும் தான் ரஜினிக்கு விஷயத்தை கொண்டு செல்வதாக கூறினாலும் முன்னேற்றம் தரும்படியான எந்த விஷயமும் நடக்கவில்லை.

இதனால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த தயாரிப்பாளர்கள் வரும் ஜன-1௦ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்கள். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கவே, இப்போது நீதிமன்றம் மூலமாக அனுமதி வாங்கியிருக்கிறார்கள். எந்த இடம் என்பதை மட்டும் தான் போலீஸ் சொல்லவேண்டும்..

இந்நிலையில் இதுகுறித்த தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க பத்திரிகையாளர்களை சந்தித்து, மேற்கூறிய தகவல்களை தெரியப்படுத்தினார்கள் வினியோகஸ்தர்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் தயாரிப்பாளரான ராகலின் வெங்கடேஷிடமோ அல்லது தமிழகத்தில் படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸிடமோ தானே பிரச்சனையை கொண்டுசெல்லவேண்டும். அதைவிடுத்து நீங்கள் நடத்தும் உண்ணாவிரதத்தில் தேவையில்லாமல் ரஜினிக்குத்தானே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறீர்கள்?” என நாம் கேட்டோம்.

அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து, “எங்கள் பிரச்சனை மக்கள் மன்றத்திற்கு, ரஜினிக்கு தெரியவேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்த அடையாள உண்ணாவிரதத்தை நடத்த இருக்கிறோம்.. ஆனால் இதன்மூலம் நிச்சயமாக ரஜினிக்கு நாங்கள் அவப்பெயர் தேடித்தரமாட்டோம்..அப்படி எண்ணமும் எங்களுக்கு இல்லை” என்று பதிலளித்தார்கள்..

ரஜினியின் பெயரை வைத்து கோடிகளில் சம்பாதித்த தயாரிப்பாளர்களும் கோடிகளில் சம்பாதிக்க நினைத்த விநியோகஸ்தர்களும் இந்த விவகாரத்தில் ரஜினியை இழுப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் நம் கேள்வி.