ரஜினி போல ஆக நினைப்பவர்கள் முதலில் இதை பின்பற்றுங்கள்..!

விஜய்-58… இதுதான் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான ஆனால் தற்காலிக பெயர். இதற்கு கருடா, புலி, மாரீசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்களும் சில ஊடகங்களும் தாங்களாகவே கற்பனை டைட்டில்கள் வைத்து அதை வதந்தியாக உலாவவிட்டுவருவது தனிக்கதை.

ஆனால் பொங்கல் அன்று தனது படத்தின் உண்மையான டைட்டிலை விஜய் அறிவிக்கப்போவதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மட்டுமல்ல, அஜித்கூட தனது படத்திற்கான டைட்டிலை அறிவிப்பதில் விஜய்யை மிஞ்சிவிடுவார்.. ஆரம்பம், வீரம், இதோ இப்போது ‘என்னை அறிந்தால்’ என பல படங்களில் தான் நாம் இந்த இழுபறியை பார்த்துக்கொண்டுதான் வருகிறோமே.

இவர்கள் இருவரில் யார் ரஜினியின் இடத்தை பிடிக்கும் தகுதியுள்ள அடுத்த நபர் என்கிற போட்டி எழுந்ததால் தான் இந்த கட்டுரை எழுதவேண்டிய அவசியமே வந்திருக்கிறது. ரஜினியின் படங்களின் டைட்டிலை பொறுத்தவரை, அவர் இன்னார் படத்தில் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகும்போதே, ரஜினியோ அல்லது படத்தின் இயக்குனரோ, யாரோ ஒருவர் படத்தின் டைட்டிலையும் சேர்த்து அறிவித்துவிடுவர்.

பாபா, சந்திரமுகி, சிவாஜி, கோச்சடையான், லிங்கா, அவ்வளவு ஏன் ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக வெறும் அறிவிப்புடன் மட்டுமே நின்றுபோன ‘ஜக்குபாய்’ படத்திற்கு கூட, பட அறிவிப்பன்றே போஸ்டருடன் டைட்டிலும் சேர்ந்தே வெளியானது..

காரணம் இதுதான் கதை என முடிவுசெய்தபின் அதற்கேற்ற டைட்டிலையும் உடனே அறிவிப்பதுதான் ஒரு இயக்குனருக்கும் நடிகருக்கும் மரியாதை சேர்க்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இன்றோ படம் ரிலீஸாகும் இரண்டு மாதங்களுக்குள் தான் விஜய், அஜித் இருவரும் தங்களது டைட்டிலை அறிவிக்கின்றனர். இதற்கு இவர்களது படங்களை இயக்கும் இயக்குனர்களும் ஒரு காரணம்.

டைட்டிலை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் வேறுசிலர் அதற்கு உரிமம் கொண்டாடி வரலாம் என்கிற அச்சம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கங்களில் தாங்கள் வைக்க விரும்பும் டைட்டில் ஏற்கனவே பதியப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதும், அப்படி பதியப்பட்டிருந்தால் தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை முறைப்படி உரிமம் வாங்கவும் (‘லிங்கா’வை அமீர் விட்டுத்தந்துபோல) முயற்சிக்கவேண்டும்..

இன்னொன்று பெரிய ஹீரோக்களின் டைட்டிலைப்போல, அதே மாதிரியான இன்னொரு டைட்டிலை (துப்பாக்கி-கள்ள துப்பாக்கி) தங்களது படத்திற்கு வைத்து பப்ளிசிட்டி தேடும் சில விஷமிகளும் இருக்கின்றனர். ஆனாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான். டம்மிகள் வந்து அதை அசைத்துவிட முடியாது..

இப்படித்தான் முன்பு ஒருமுறை விஜயகாந்த் தேர்தலில் நிற்கும் தொகுதியில் அதே பெயருள்ள நான்கைந்து பேர்களை சுயேச்சைகளாக நிற்கவைத்து அவரது வெற்றியை தடுக்க முயற்சித்தார்கள்.. அதுபோல இப்படி டம்மி பெயர்கள வைப்பதும் முட்டாள்தனமான முயற்சி தான். இவையெல்லாம் ஒரிஜினலை பாதித்து விடாது.

அதனால் விஜய், அஜித் இந்த இருவர் மட்டுமல்ல, இவர்களைப்போலவே டைட்டில் வைக்க தாமதம் செய்யும் சில ஹீரோக்களும் தைரியமாக டைட்டிலை முன்கூட்டியே அறிவித்துவிட்டு படப்பிடிப்பிற்கு செல்லவேண்டும். அதற்கு அப்புறமாக யார் அடுத்த ரஜினி என்கிற பந்தயத்துக்கு போகட்டும்.