காவியத்தலைவன் – விமர்சனம்

திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிற ஒரு நாடக கலைஞனின் பொறாமை, எப்படி அவனை வீழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்பதுதான் ‘காவியத்தலைவன்’ படத்தின் கதைக்கரு. அதை சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த, நாடகத்திற்காகவே தங்களை அர்ப்பணித்த இரண்டு நாடக நடிகர்களின் வாழ்க்கையாக காட்டியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்..

நாசர் நடத்திவரும் நாடக கம்பெனியில் சிறுவயது முதற்கொண்டு நாடகமே உயிர்மூச்சாக வாழும் இளைஞர்கள் பிருத்விராஜும் சித்தார்த்தும்.. பிருத்விராஜ் நாடகங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர். ஆனாலும் ராஜபார்ட்டாக சித்தார்த்திற்கு முக்கியத்துவம் கிடைக்க, மனம் பொறுமுகிறார் பிருத்விராஜ்.

இந்நிலையில் நாடக சபாவில் தஞ்சமடைந்த வேதிகாவும் பிருத்விராஜின் காதலை மறுத்து சித்தார்த்தை விரும்ப பொறாமை இன்னும் அதிகமாகிறது. நாடகம் பார்க்க வரும் ஜமீன்தாரின் மகளுடன் காதல் வயப்படும் சித்தார்த்தின் காதலை அறிந்த பிருத்விராஜ் அதுபற்றி நாசரிடம் போட்டுக்கொடுத்து அவரது காதலுக்கு உலைவைக்கிறார் பிருத்விராஜ்.

இனி நாடகங்களில் நடிக்க கூடாது என சித்தார்த்திடம் சத்தியம் வாங்கி, ஊரைவிட்டு தனது குழுவினருடன் ஊரைவிட்டு கிளம்புகிறார் நாசர். அதனால் அந்தப்பெண், தற்கொலை செய்துகொள்ள, கோபத்தில் குருவிற்கே சாபம் விடுகிறார் சித்தார்த். நாசர் மனமுடைந்து உயிரைவிடுகிறார்.

இப்போது கம்பெனி பிருத்விராஜ் கைவசம் வருகிறது.. ஆனால் தனது குருவின் மரணத்திற்கு காரணமான சித்தார்த்தை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுடன் கம்பெனியை நடத்துகிறார் பிருத்விராஜ். ஆனாலும் பிருத்விராஜின் வாக்கையில் மீண்டும் வேறு விதமாக நுழைய மீண்டும் மனச்சூறாவளியில் சிக்கிய பிருத்விராஜ் இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாடகக்கலை எப்படி இருந்தது, நாடக நடிகர்களின் வாழ்க்கை நிலை இப்படி இருந்திருக்கலாம் என்பற்கு திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.. பிருத்விராஜும் சித்தார்த்தும் தங்களது நடிப்பால் நாடக கலைக்கு உயிரூட்ட முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.. க்ளைமாக்ஸில் எடுக்கும் முடிவு ஒரு கலைஞனுக்கு புகழும் அங்கீகாரமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும்போது நிஜத்தால் சுடுகிறது. சித்தார்த்தின் கதாபாத்திரமும் வெகு நேர்த்தி.

சித்தார்த்தின் மீது தான் கொண்ட காதலுக்கு நேர்மையாக இருக்கும் வேதிகாவின் கதாபாத்திரம் மீது வெறுப்பு ஏற்படவே செய்கிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் சித்தார்த்தின் காதலியாக நடித்திருக்கும் அனைகா சோட்டியின் சிரிப்பும் துறுதுறுப்பும் நம்மை ஈர்க்கிறது.

நாடக குருவான நாசரின் கம்பீரமான, கோபமான நடிப்பு, ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணனின் அலட்சியமான நடிப்பு, வாத்தியாராக நடித்துள்ள தம்பிராமையா, சிங்கம்புலி, மன்சூர் அலிகான் உட்பட அனைவரும் இயல்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை நம் மனதில் பதிய வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும் ஆர்ட் டைரக்டர் சந்தானமும் உழைப்பை கொட்டியிருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏய் மிஸ்டர் மைனர்’, ‘சண்டிக்குதிரை’ மற்றும் ‘யாருமில்லா’ ஆகிய பாடல்கள் ரிப்பீட் ரகம்.

மெதுவாக நகரும் கதை படத்திற்கு சற்று பலவீனம் தான் என்றாலும் கமர்ஷியல் சினிமாக்களுக்கு மத்தியில் நாடக நடிகர்களின் வாழ்க்கையை படமாக்க ஆத்மார்த்தமாக முயற்சி செய்திருக்கும் வசந்தபாலன் பாராட்டுக்குரியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..