நாட்டின் மிக அத்தியாவசிய தொழிலான விவசாயத்தையும் குறிப்பாக நெல் உற்பத்தியை பெருக்குவதை பற்றியும் விஞ்ஞான ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் விஞ்ஞானி’.
விஞ்ஞானியான பார்த்தி ஒரு விதமான மரபணு நெல்லை கண்டுபிடித்து நாட்டின் உணவுத்தேவையை அதிகரிக்க முயற்சிக்கிறார். அதேசமயம் சங்ககாலத்தில் தொல்காப்பியர் கண்டுபிடித்த ‘தாகம் தீர்த்தான்’ எனும் நெல்லில் கொஞ்சம் மண்ணிற்குள் புதைத்து வைப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார் கிராமத்தில் ஆசிரியையாக இருக்கும் மீரா ஜாஸ்மின்.
அதை விஞ்ஞானத்தின் உதவியால் பெருக வைத்தால் மக்களின் பசியும் தாகமும் தீருமே என நினைக்கும் மீரா அதற்கேற்ற ஒரு விஞ்ஞானியை தேடுகிறார். தனது அப்பாவின் நண்பர் மகனான தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானியான பார்த்தியை பற்றி தெரிந்துகொண்டு, அவரை திருமணம் செய்து அவர் மூலம் இதை நிறைவேற்ற முயற்சி எடுக்கிறார். முயற்சி பலித்ததா என்பது க்ளைமாக்ஸ்.
புதுமுகம் பார்த்தி அவரே நடித்து, இயக்குனர் வித்யாதரன் மேற்பார்வையில் படத்தையும் இயக்கியுள்ளார்.. விஞ்ஞாநியான அவரது கதாபாத்திரத்திற்கு அவரது நடிப்பு பொருந்தாமல் தனித்து நிற்கிறது. நடிப்பு அல்லது டைரக்ஷன் ஏதோ ஒன்றை மட்டும் கவனித்திருக்கலாம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின். முன்பு பார்த்த அதே அழகுடன்.. ஆனால் கண்ணியமாக சித்தரிக்கப்படும் அவர் கதாபாத்திரம் அடுத்து பார்த்தியை திருமணம் செய்ய அவர் நடத்தும் கூத்துக்களால் சிதைந்து விடுகிறது.
தொல்காப்பியராக கொஞ்ச நேரமே வரும் போஸ் வெங்கட்டின் நடிப்பு அருமை.. காதலிக்க திட்டம் போட்டு தரும் விவேக்கின் காமெடி எடுபடவில்லை., அவரது மனைவி தேவதர்ஷினி, மீராவின் அப்பா தலைவாசல் விஜய், அவர் அம்மா ஸ்ரீநந்தினி அனைவரும் மீராவுக்கு பார்த்தியை செட் செய்ய நடத்தும் நாடகம் அருவருப்பு ரகம்.
தொல்காப்பியர் இலக்கியம், தாகம் தீர்த்தான் நெல் என சங்க இலக்கியங்களை விஞ்ஞானத்துடன் தொடர்புபடுத்தி ஆரம்பத்தில் சுவராஸ்யம் ஏற்படுத்துவது என்னவோ உண்மை தான். ஆனால் அதை திரைக்கதையால் செதுக்கி, மக்களின் மனதில் ஒரு தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த தவறிவிட்டார் பார்த்தி..