முணுக்கென்ற கோபமும் யாரையும் படக்கென்று கைநீட்டும் வேகமும் கொண்டவர்கள் விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும்.. சுனைனாவை காதலிக்கும் கிருஷ்ணாவுக்கு அவரது அண்ணனால் பிரச்சனை வர அப்போது ஏற்படும் சண்டையில் விஜய்சேதுபதியால் கொல்லப்படுகிறார் சுனைனாவின் அண்ணன்..
இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி கிருஷ்ணாவை விஜய்சேதுபதியிடம் இருந்து பிரிக்கிறது.. எதிரிகளுடனும் துரியோதன-கர்ண கூட்டணி அமைக்கிறார் கிருஷ்ணா.. எதிரிகளிடம் இருந்து சுனைனா குடும்பத்தை காப்பாற்றி அவர்களுடன் நெருக்கமாகிறார் விஜய்சேதுபதி.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கொலையாளி யார் என்கிற உண்மையை சுனைனா குடும்பத்தாரிடம் கிருஷ்ணா உடைக்க, விஜய்சேதுபதியின் நிலை என்னவாகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்..
இதுநாள் வரை நகைச்சுவை கலந்த கதாபத்திரங்களில் பரிணமித்து வந்த விஜய் சேதுபதி இந்தப்படத்தில் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். கிருஷ்ணாவுடனான நட்பு, சுனைன குடும்பத்தாரின் மீதான மரியாதை, இடையில் விழும் கொலைப்பழி என கலவையான உணர்வுகளை கச்சிதமாக பிரதிபலிக்கிறார்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்னும் விதமான கேரக்டர் கிருஷ்ணாவுக்கு.. தன் காதல் கைகூடாதோ என்கிற நிலையில் விஜய்சேதுபதி கொலை செய்த உண்மையை போட்டுடைக்கும் காட்சியில் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்கிறார்.
கிராமத்து கிளியாக அழகு சுனைனா.. கிருஷ்ணாவின் காதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சமாளிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாகவே சமாளித்திருக்கிறார். சுனைனாவின் அண்ணனாக ஆக்ரோஷம் காட்டும் ‘கோலிசோடா’ மதுசூதனன், கிருஷ்ணாவின் கோபக்கார அண்ணன் போஸ் வெங்கட் உட்பட நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் அனைவரிடமும் குமரி மாவட்ட மண் மணம் வீசுகிறது.. அதற்கு பாலபரணியின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் சாமரம் வீசியிருக்கிறது.
ஆழமான ஒரு நட்பு, அதற்குள் வார்த்தைகளால் ஏற்படும் விரிசல், அதனால் விளையும் வன்மம் என கிராமத்து மண்ணில் கதை பின்னியுள்ளார் இயக்குனர் இயக்குனர் ஜெயகிருஷ்ணா.. ஏற்கனவே நமக்கு பரிச்சயமான கதை தான் என்றாலும் வன்மத்தின் தாக்கத்தை நன்றாகவே பதிவு செய்திருக்கிறார் ஜெயகிருஷ்ணா.