பூஜை – விமர்சனம்

கூலிப்படையை வைத்து தன் குடும்பத்தை போட்டுத்தள்ள நினைக்கும் ரவுடியை வேரோடும், வேரடி மண்ணோடு சாய்க்கும் ஆவேச இளைஞனின் கதைதான் ‘பூஜை’.. சுமோ, ஸ்கார்பியோ, செல்போன் மிக முக்கியமாக அருவா இவற்றுடன் ஏரியாவுக்கு ஏற்றமாதிரி ஒரு ஆக்ஷன் பிளாக்.. இப்படி ‘ஹரி’ பிரான்ட் முத்திரையுடன் வந்திருக்கும் கமகம மசாலாதான் ‘பூஜை’..

முகம் தெரியாத ரவுடியை அடித்து வலியப்போய் சிக்கலை இழுத்துக்கொள்ளும் ‘சண்டக்கோழி’யாக, தாயை கொன்றவன் வேறு மாநிலத்துக்கு தப்பித்துச்சென்றாலும் விரட்டிச்சென்று பழி தீர்க்கும் ‘சிங்க’மாக நடிப்பதென்றால் விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.. ‘வட்டிக்கடை’ வாசுவாக காதல், காமெடி, ஆக்ஷன் என ஆல் ஏரியாவிலும் பிட் ஆகிறார் விஷால்.

ஜாடிக்கேத்த மூடியாக ஸ்ருதிஹாசன்.. கூடவே விஷாலுக்கு உதவி செய்கிறேன் என சேசிங் காட்சிகளிலும் இறங்கி தூள்கிளப்புகிறார்.. சூரியின் சலம்பலும் அதற்கு ஈடுகொடுக்கும் பிளாக் பாண்டி மற்றும் இமான் அண்ணாச்சியின் சத்தாய்ப்பும் காமெடி ஏரியாவை கவர் பண்ணுகின்றன.

மிடுக்கான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது சத்யராஜ் கதாபாத்திரத்தில்.. முகேஷ் திவாரியின் வில்லத்தனம் நன்றாகவே எடுபடுகிறது. ராதிகா, ஜெயபிரகாஷ் தவிர சித்தாரா, கௌசல்யா, ஐஸ்வர்யா என முன்னாள் கதாநாயகிகள் அனைவரும் இதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சிற்கு வந்து போகிறார்கள்..

விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் ப்ரியனின் ஒளிப்பதிவும், பாரவாயில்லையே என ஒகே சொல்லவைக்கும் யுவனின் பாடல்களும் படத்துடன் நம்மை ஓடவைக்கின்றன. ஏன், எதற்கு என யோசிக்கவிடாமல் பரபரவென நகரும் திரைக்கதையால் ரசிகர்களை இரண்டுமணி நேரம் கட்டிப்போட முடிந்திருக்கிறது என்றால் அது இயக்குனர் ஹரிக்கு வெற்றிதான்.

பூஜை – அமர்க்களம்…