லைகா’வின் “கத்தி” படத்துக்காக தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகனை சந்தித்த ‘பெப்சி’ சிவா:

சில மாதங்களாக தமிழக சினிமாவிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி, பெரும் சர்ச்சைக்குரிய செய்தியாக உலா வருவது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் “கத்தி” திரைப்படம். இந்த படத்தை தயாரித்துள்ளது “லைகா மொபைல்” நிறுவனத்தின் “லைகா புரொடக்ஷன்ஸ்”. “லைகா புரொடக்ஷன்ஸ்” நிறுவனத்திற்காக “லைகா மொபைல்” நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் “அயங்கரன்” கருணாகரன் இனைந்து தயாரித்துள்ளனர்.

சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சா’விற்கு நெருக்கமானவர் என்று முதல் முதலில் இணையதளங்களில் செய்தி பரவ ஆரம்பித்து அந்த செய்தி உலகம் முழுக்க அணைத்து ஊடகங்களிலும் வெளியானது. இந்த செய்தியின் எதிரோலியாக “கத்தி” திரைப்படம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.

“கத்தி” திரைப்படம தீபாவளி திருநாளன்று உலகம் முழுக்க வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று சில மாதங்களாக சில தமிழக அமைப்புகளும் கட்சிகளும் எதிர்த்து வந்தன.

“கத்தி” திரைப்படத்தின் சர்ச்சை ஒரு வழியாக சில நாட்களுக்கு முன்பிலிருந்து அமைதி நிலைக்கு திரும்பும் வேளையில், இலங்கை அதிபர் ராஜபக்சாவுடன் சிரித்து உரையடியவரும், “லைகா மொபைல்” விழாவில் கலந்துகொண்டவருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “கத்தி” திரைப்படத்திற்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்தார். பின்னர் அவருடைய குரல் ஓங்கவில்லை என்பது உண்மை. ஆனால் தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் மட்டும் தொடர்ந்து “கத்தி” திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

“கத்தி” திரைப்பட பிரச்சனை கடைசி நேரம் வரை ஓயாமல் இருக்கும் காரணத்தினால் அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான “அயங்கரன்” கருணாகரன் “FEFSI” அமைப்பிடம் முறையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று (19-அக்டோபர்-2014) சென்னை வடபழனியில் உள்ள “FEFSI” அலுவலகத்தில் “FEFSI” அமைப்பின் தலைவர் சிவா அவர்களின் தலைமையில் ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் “FEFSI” சிவா, “அயங்கரன்” கருணாகரன் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது சிவா அவர்கள் வேல்முருகனிடம் “லைகா” நிறுவனத்திற்காக வக்காலத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. “லைகா” தயாரித்துள்ள இந்த “கத்தி” திரைப்படத்தினால் “FEFSI” ஊழியர்கள் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் பணியில் இருந்து பயன் அடைந்துள்ளனர். இந்த திரைப்படம் தடையின்றி வெளிவந்தால் தான் அவர்கள் மீண்டும் அடுத்தடுத்து திரைப்படம் தயாரிப்பார்கள் அதனால் “FEFSI” ஊழியர்களும் சரி, திரைத்துறையும் சரி நன்மை அடையும் என்று கூறியுள்ளார்.

“கத்தி” திரைப்படம் இவ்வளவு பிரச்சனையில் இருக்கும் நேரத்தில், “FEFSI” சிவா மற்றும் “அயங்கரன்” கருணாகரன் மட்டும் தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகனுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை பற்றி அரசியல் வட்டாரத்தில் பல கோணங்களில் பேசப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தையின் போது படத்தின் நாயகன் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இருந்திருந்தால் இந்த கசமுசா பேச்சுக்கு இடமில்லை.

பேச்சுவார்த்தை சுமுகத்தில் முடிந்துள்ளதாக “FEFSI” அமைப்பினரும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் சொல்லப்படுகிறது. இன்று மாலை சும்மார் 5:30 மணியளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் “கத்தி” சம்மந்தமாக “சென்னை பிரஸ் கிளப்பில்” பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார்.

“கத்தி” திரைப்படத்திற்கு “FEFSI” தொழிலாளர்கள் நலன் கருதியும், விஜய் ரசிகர்கள் “கத்தி” திரைப்படம் தீபாவளி அன்று வெளிவராமல் ஏமாற்றம் அடையக்கூடாது என்ற காரணத்தினால் சில நிபந்தனைகளுடன் படத்தை வெளியிடுவதற்கு தங்கள் கட்சி தடையாக இருக்காது என்று வேல்முருகன் அவர்கள் தங்களுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பார் என்று வேல்முருகன் வட்டாரங்கள் மற்றும் “கத்தி” திரைப்பட வட்டாரங்கள் பேசிக்கொள்கிறார்கள்.