சரத்குமார் வழியில் வித்யுத் ஜாம்வாலின் பயணம் அமையுமா…?

ஒரு பிளாஸ்பேக்கை பார்த்துவிட்டு விஷயத்துக்கு வருவோமா..? 1990களில் ‘புலன் விசாரணை’ படத்தில் விஜயகாந்த்துடன் இறுதிக்காட்சியில் மோதும் வில்லன் டாக்டராக நடித்து, யார் இவர் என ரசிகர்களை புருவம் உயர வைத்தார் சரத்குமார். அடுத்து அதே விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் அவருக்கு நண்பனாகவும் நடித்தார்.. சில மாதங்களிலேயே கதாநாயகன் வாய்ப்பு தேடி வந்து அதன்பின் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றார்.

இப்போது ‘துப்பாக்கி’ வில்லன் வித்யுத் ஜாம்வாலுக்கும் இதுபோன்ற ஒரு நேரம் ஒர்க் அவுட் ஆகும் வாய்ப்பு வரப்போகிறது என்றே தெரிகிறது. காரணம் சமீபத்தில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக அவர் ஏற்றிருந்த கேரக்டர் அனைவரையும் கவர்ந்து விட்டது.

அலட்டல் இல்லாத வில்லத்தனம் காட்டாத அமைதியான நடிப்பு, களையான முகமும் கட்டுமஸ்தான உடலமைப்பும் சேர்ந்துகொள்ள பாதியிலேயே நண்பனுக்காக உயிரைவிட்டு ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளுகிறார் வித்யுத். அதுமட்டுமல்ல படத்தில் சூர்யா அவரை தளபதி மம்முட்டி ரேஞ்சுக்கு தூக்கி வைத்து பேசுகிறார்.

‘கேப்டன் பிரபாகரன்’ படத்திலும் விஜயகாந்த், சரத்குமாரை இப்படித்தான் தூக்கி வைத்து புகழ்ந்து பேசியிருப்பார். வில்லனாக நடித்து குணச்சித்திர நடிகராக மாறும் எல்லோருக்கும் ஹீரோவாகி விடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் வித்யுத் ஜாம்வாலுக்கு அந்த அதிர்ஷ்டம் சீக்கிரமே கைகூடும் என்பது உறுதி.