சூர்யாவை வருத்தத்தில் தள்ளிய ‘அஞ்சான்’..!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘அஞ்சான்’ படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. லிங்குசாமி இதற்குமுன் ‘வேட்டை’யில் கோட்டை விட்டிருந்தாலும் இந்தப்படத்தில் விட்டதை பிடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களுக்கு படம் சரியாக தீனி போடாமல் அரைகுறை வயிறுடன் அனுப்பிவிட்டது. இதனால் படம் பார்த்த பலர் படத்தை பற்றி நெகட்டிவான விமர்சனங்களை எழுதி சமுகவளைதலங்களிலும், இணையத்தளங்களிலும் உலாவவிட்டுள்ளனர்.

இதனால் வருத்தத்தில் இருந்த சூர்யாவை மேலும் சிலர் தங்களது செயல்களால் அப்செட் ஆக்கியுள்ளனர். நேற்று முன் தினம் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபுவின் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா நடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது மாலை சுமார் 5:30 மணியளவில், அந்த கட்டிடத்தின் காம்பவுண்ட் ஓரமாக நின்று எட்டிப்பார்த்த சில ரசிகர்கள் சூர்யாவையும் ‘அஞ்சான்’ படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக கமென்ட் அடித்தார்களாம். அதை கண்ட நடிகர் சூரியாவிற்கு சற்று மனவருத்தம் ஏற்பட்டு ரசிகர்களிடம் கோபமுடன் பேசியுள்ளார். இவர் கோபத்தையும் கண்டுக்காத ரசிகர்கள் சூரியாவை மீண்டும், மீண்டும் கிண்டலிட்டு அவரை அதிக கோபத்துக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் படக்குழுவினர் இந்த விஷயத்தை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். காவல்துறையினர் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து ரசிகர்களை விரட்டி உள்ளனர். இதனால் கோபமான சூர்யா, தான் ‘அஞ்சான்’ ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறி சென்றுவிட்டாராம்.

திரைப்படம் வெளியான அன்றோ அல்லது ஒரு நாள் முன்னரோ அல்லது பின்னரோ பத்திரிக்கையாளர்களுக்கு பிரஸ் ஷோ போட்டுக்காட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் “அஞ்சான்” படத்திற்கான பிரஸ் ஷோ நேற்று மாலைதான் திரையிடப்பட்டது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த சூர்யாவும், லிங்குசாமியும் ரொம்பவே மன வருத்தத்துடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்கள்.

“படம் பார்த்த பலர் வேண்டுமென்றே நெகடிவ்வான விஷயங்களை பரப்பி வருகிறார்கள். இதில் படம் பார்க்காதவர்கள் கூட சேர்ந்துகொண்டதுதான் வேதனை தருகிறது. இப்படி தேவையில்லாமல் நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு ஒருவரின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பது நல்ல விஷயம் இல்லை. பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் உங்களுக்கு தோன்றியதை அப்படியே எழுதினாலே எங்களுக்கு மிகப்பெரிய பலம்” என்கிற ரீதியில் கோரிக்கை வைத்துவிட்டு சென்றார்கள்.

சூர்யா கதை தேர்வில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது..