பார்த்திபனின் “ரெண்டுல ஒண்ணு” திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா..?

ஆகஸ்ட்-15 ஆம் தேதி தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வெளியிடுகிறார் பார்த்திபன். முதலில் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட தீர்மானித்து அதற்கான விளம்பரமும் கொடுத்தார்.. ஆனால் சினிமாவில்தான் நாம் நினைப்பது மாதிரி எதுவுமே நடப்பதில்லையே..

‘வேலையில்லா பட்டதாரி’யும் ‘சதுரங்கவேட்டை’யும் சேர்ந்து தியேட்டர்களை ஆக்கிரமித்துக்கொள்ள அதற்காக தனது ரிலீசை தள்ளிவைத்தார். வேலையில்லா பட்டதாரி, சதுரங்கவேட்டை இரண்டுமே ஒரு வாரத்துக்கு மேல் ஓடக்கூடியவை. அதனாலேயே ஜூலை-25ல் வெளியாகவேண்டிய ‘ஜிகர்தண்டா’ ஒரு வாரம் தள்ளி ஆகஸ்ட்-1ல் ரிலீசானது. கூடவே ‘சரபம்’ வேறு.. அதனால் அவற்றிற்கு தியேட்டர்கள் வேண்டும்.. அதனால் மீண்டும் ஆகஸ்ட்-29க்கு ரிலீசை மாற்றினார்.

இன்னொரு காரணம் ஆகஸ்ட்-15ல் ‘அஞ்சான்’ வெளியாவதால் அதன் ஓட்டத்திற்காக 15 நாட்களாவது ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தனது படத்திற்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தனது படம் நின்று நிதானமாக ரசிகர்களை சென்றடையவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடைவெளி விட்டார் பார்த்திபன்.

ஆனால் இப்போது திடீரென கிடைக்கிற தியேட்டர் கிடைக்கட்டும் என ‘அஞ்சான்’ படத்துடன் சேர்த்தே தனது படத்தையும் ரிலீஸ் செய்கிறார்.. காரணம் அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்களை தன் படத்துக்கு வரவழைக்க இதன் மூலம் முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.. அதனால் தான் “ரெண்டுல ஒண்ணு ஏன் பாக்கணும்.. ரெண்டையுமே பாக்கலாமே” என போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். பார்த்திபனின் இந்த “ரெண்டுல ஒண்ணு” திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா..?