திருட்டு விசிடிக்கு ‘ஆப்பு’ வைக்கிறார் சேரன்..!

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் 300 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு அதில் 150 படங்கள் மட்டுமே ரிலீசாகின. அப்படி என்றால் மீதி படங்களின் கதி..? தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் அப்படியே அந்தரத்தில் நிற்கின்றன. இந்த நிலையில் இந்த வருடமும் அதே அளவில் படங்கள் தயாராகின்றன. இதிலும் ஓரளவு படங்கள் தான் ரிலீசாகும்.. அப்போ மற்ற படங்களின் கதி என்ன…? முதல் போட்ட தயாரிப்பாளர்களின் கதி என்ன?

இதற்கு தீர்வுகாணும் விதமாக இயக்குனர் சேரன் உருவாக்கியுள்ள அமைப்புதான் C2H. அதாவது சினிமா TO ஹோம். தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களை தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக மக்களுக்கு கொண்டும் செல்லும் வழியை இந்த C2H உருவாக்கியுள்ளது.

இதன்மூலம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படங்கள் டிவிடிக்களாக மாற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள C2H ஏஜென்ட்டுகளால் வெறும் ஐம்பது ரூபாய்க்கே வீடு தேடி வந்துவிடும். மேலும் டி.டி.எச், ஆன்லைன், செட் ஆப் பாக்ஸ், லோக்கல் கேபிள் ஆகியவற்றில் கூட இதை ஒளிபரப்ப இருப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே படம் பார்க்கும் வசதி உருவாகிறது.

இதனால் திருட்டு விசிடியின் ஆதிக்கம் வெகுவாக குறைவதோடு நாளடைவில் அவர்களும் இந்த ஒரிஜினல் டிவிடியையே வாங்கி விற்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதன் லாபம் எல்லா வகைகளிலும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் இயக்குனர் சேரன்.
தனது எட்டுமாத கடின உழைப்புடன் இதை சாத்தியமாக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ள சேரன் நேற்று இந்த அமைப்பை காமராஜர் அரங்கத்தில் நடந்த துவக்க விழாவில் அறிமுகப்படுத்தினார். கமலின் ஆசிர்வாதத்தோடு இயக்குனர் இமயம் பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், கே.பாக்யராஜ், சீமான், அமீர், ராம் இவர்களுடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு இந்த அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்கள். சேரன் உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பின் மூலம் தனது படங்களை வரிசையாக ரிலீஸ் செய்ய ஒப்புதல் தந்து அவருக்கு நட்புக்கரம் நீட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார்.