உயிருக்கு உயிராக – விமர்சனம்

uyirukku-uyiraga-movie-release-may-23-poster

சாமுண்டி, வானவில், ராஜ்ஜியம் போன்ற படங்களை இயக்கிய மனோஜ்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் படம். முந்தைய படங்களில் இருந்து விலகி கல்லூரி மாணவர்களை பற்றியும், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் புரிய வைக்கும் முயற்சியாக இயக்கியுள்ள படம் உயிருக்கு உயிராக. இந்த கருத்தை காதல், பாசம், லட்சியம் ஆகியவற்றை கலந்து ஒரு கமெர்சியல் கலவையாக கொடுத்துள்ளார்.

படத்தின் கதைப்படி, சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் நாயகன் சரண்சர்மாவுக்கு, காதல் என்றாலே வெறுப்பு. ஆனால், அப்பா பிரபுவும், அவரது அம்மாவும் செய்தித்தாளில் காதலி தேவை என விளம்பரம் கொடுக்க, அதன் பின் அலப்பறையான அரைமணி நேரம் ஓடுகிறது. முடிவில் ஒரு சரணை காதலிக்கும் ப்ரீத்தி தாஸ், கவர்னரின் பேத்தி என தெரிகிறது. அதனால் அவர் படும் அவஸ்தைகளும், காதலை அவர் வெறுக்கும் காரணங்களும் வெளிப்படுகின்றன.

நாயகன் சரணின் அண்ணன், காதலால் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின்பு சென்னை வரும் அவர் பெரிய கல்லூரியில் சேர்ந்து அண்ணனை போலவே அறிவியலில் சாதித்து காட்ட, வெறியுடன் உழைக்கிறார். இறுதியில் சாதித்தாரா? நாயகியை கரம் பிடித்தாரா? நாட்டுக்கு எந்த அளவுக்கு மாணவர்கள் தேவை? என்பதையும் சொல்லியுள்ளார் இயக்குனர் மனோஜ்குமார்.

படத்தில் சஞ்சீவ், சரண் என இரண்டு ஹீரோக்கள். முதல் பாதியில் சரண், இரண்டாம் பாதியில் சஞ்சீவ் என ஆளுக்கு பாதியாக படத்தை தாங்குகிறார்கள். அண்ணன், தம்பியாகவும், அண்ணனை இழந்து வாடும் தம்பியாகவும், காதலில் தோல்வியடைந்த அண்ணனாகவும் இரண்டு பெரும் நன்றாக நடித்துள்ளனர்.

இரண்டு நாயகர்களுக்கும் ஜோடியாக இரண்டு நாயகிகள். ப்ரீத்தி தாஸ், நந்தனா இருவரில் மிகவும் வில்லதனமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் நந்தனா. ப்ரீத்தி தாஸ் மாடர்ன் கேரக்டர். மருத்துவக்கல்லூரி மாணவியாக வந்து, நாயகனை காதலிக்க அணைத்து முயர்ற்சிகளையும் செய்கிறார்.

பிரபு நாயகர்களின் தந்தையாக பளிச்சிடுகிறார். முன்மாதிரியான தந்தையாக வாழ்கிறார். சதீஷ் செய்யும் காமெடியில் நிறைய இடங்கள் அறுவை.

படத்தின் ஒளிப்பதிவில் ஊட்டியில் வரும் காட்சிகள் குளிர்ச்சி. படம் முழுக்க மிக பிரமாண்டமாக காட்டியுள்ளார்.

இசை சாந்தகுமார். பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கும்படி இல்லை. பின்னணி இசையும் சுமார்.

முதல் பாதியில் வரும் காட்சிகளில் சோர்வும், இரண்டாம் பாதி ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஆறுதலும் கிடைப்பது உண்மை. படத்தின் நீளம் அதிகமாக இருப்பது மைனஸ். ஒரு தனியார் கல்லூரியை பற்றியே அடிக்கடி பேசுவதும், கல்லூரியை உயர்த்தி பேசுவதும் ஏதோ அந்த கல்லூரியில் விளம்பர படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.