ரஜினி, விஜய் என் நண்பர்கள், அவர்களை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை – டி.ராஜேந்தர்:

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கும் சூழலில், நடிகரும், இலட்சிய தி.மு.க தலைவரும், ஜோதிட ஆராய்ச்சியாளருமான டி.ராஜேந்தர் சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

நண்பர் திரு.ஆற்காடு வீராசாமி மூலம் தி.மு.க தலைவர் கலைஞர் கடந்த டிசம்பர் மாதம் 27’ம் தேதி இலட்சிய தி.மு.க’விற்கு தி.மு.க கூட்டணியில் சீட்டு தருவதாக சொல்லி அழைத்தார்கள் என்று கூறினார். முன்னாள் தலைவர், குரு என்ற முறையில் அவரை சந்திக்க டி.ராஜேந்தர் சென்று இருந்ததாகவும், சிலர் பார்வையில் அது தவராகப்பட்டாலும், இவர் சந்தித்தது அவர் மீதுள்ள மரியாதை மட்டுமே காரணம் என்று கூறினார். தனக்கு கடந்த காலத்தில் தி.மு.க’வில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணத்தினால் கலைஞர் அவர்கள் இலட்சிய தி.மு.க’வை கலைத்துவிட்டு தி.மு.க’வில் இணைய கேட்டப்பொழுது தான் அதை மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

“தி.மு.க’விற்கு பல இக்கட்டான சூழ்நிலை வந்தபோதெல்லாம் தான் அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். இப்போதும் தான், கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது கலைஞரின் ஆவல், ஆனால் தி.மு.க’வின் தற்போதைய நிலை வேறு. அவர் நினைப்பதே அக்கட்சியில் நடப்பதில்லை. யார் நினைப்பதோ நடக்கிறது.” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“என்னை கலைஞர் தி.மு.க’வில் சேர்க்க நினைத்தார். ஆனாலும் நான் உறுப்பினராக சேரவில்லை. அதற்குள்ளேதான் அவர்கள் கட்சிக்குள்ளே உட்கட்சி குழப்பம், இதிலே போய் நான் ஏற்று கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான் என்று, என்னை இடவிடுவார்களா முழக்கம்? இதற்குள்ளே அத்தனையும் அடக்கம்! இதன் மூலம் என்னை செய்துவிட்டதாக சிலர் நினைக்கலாம் முடக்கம், ஆனால் என்னை பொறுத்தவரை இது ஒரு தொடக்கம்” என்று தனது வழக்கமான அடுக்குமொழி பாணியில் கூறினார்.

தான் தி.மு.க’வில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்த பொழுது, வைகோ பொதுக்கூட்டங்களுக்கு தன்னை வந்து அழைத்து செல்வார். தி.மு.க’வில் அவருக்கெல்லாம் சீனியர் நான் என்று தன்னை பெருமையிட்டு கூறினார். அன்று எம்.ஜி.ஆர்’ஐ துணிச்சலுடன் கலைஞர் எதிர்த்த காரணத்தினால் தான், தான் கலைஞர் அவர்களை குருவாக ஏற்று கொண்டதாக தெரிவித்தார். ஆனால் இன்று இதே கலைஞர் கருப்பு எம்.ஜி.ஆர்’க்கு (விஜயகாந்த்) காத்து கொண்டிருப்பது மிகவும் கேவலம் என்று குறிப்பிட்டார். இதற்க்கு அன்றே கலைஞர் அவர்கள் சிகப்பு எம்.ஜி.ஆர்’யிடம்(எம்.ஜி.ஆர்) காம்ப்ரமைஸ் செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு இலட்சிய தி.மு.க’வை வளர்ப்பதே தனது முதல் வேலை என்றார் டி.ராஜேந்தர். அப்போ இதுவரை இன்னும் வளரவில்லை என்று தி.ராஜேந்தர் அவர்களே ஒப்புக்கொள்கிறார். விரைவில் கட்சியை வளர்த்தால் சரி.

தி.மு.க’வில் கலைஞர் அவர்களும் அவரது மகன் தளபதி அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு வேலை நானும் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தால் எப்படியெல்லாம் பிரசாரம் செய்வேன் என்று அரசியல் தெரிந்தக்வர்களுக்கு தெரியும். காலம் கைகொடுத்தால் மட்டுமே யாரும் களம் இறங்க முடியும். தான் இப்போது தேர்தலில் நிற்கவில்லை என்றாலும், வாழ்க்கையில் எந்த நிலையிலும் தரம் தாழ்ந்து போகமாட்டேன் என்றும் இதுவே அவருடைய இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

ஒற்றன் செய்தி’யின் சில கேள்விகளும் அதற்க்கு டி.ராஜேந்தரின் பதில்களும் கீழே:

சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய், பா.ஜ.க. பிரதம வேட்பாளர் மோடி அவர்களை சந்தித்ததும் அதை பற்றிய அவருடைய கருது என்னவென்று கேட்டோம். ரஜினி மற்றும் விஜய் தன்னுடைய சக நடிகர்கள் மற்றும் நண்பர்கள் என்றும், மோடியுடனான அவர்களுடைய சந்திப்பை பற்றி தான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று நாசுக்காக கேள்வியிலிருந்து நழுவிக்கொண்டார்.

தமிழகத்தில் தேர்தல் நேர சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. வியாபாரிகளும், நகை மற்றும் ஜவுளி வாங்க செல்பவர்கள் தான் இந்த தேர்தல் நேர சோதனையில் சிக்கி தவிக்கிறார்கள். இதுவரை ஏதேனும் ஒரு அரசியல்வாதியாவது சோதனையில் சிக்கினாரா? இல்லை. அப்போ அரசியல்வாதி எவரும் பணம் எடுத்து செல்லவில்லையா? இல்லை சோதனை செய்யப்படவில்லையா? என்ற கேள்வியை நம்மிடம் எழுப்பிவிட்டு தன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார்.