அஜித்துக்கு ‘முகவரி’ கொடுத்த ஒரு இயக்குனரின் கடைசிகட்ட எதிர்பார்ப்பு!

Six-Candles

அஜித்துக்கு முகவரி தந்த இயக்குனர் V.Z.துரை, அடுத்து கொடுத்த தொட்டி ஜெயா, நேபாளி படங்கள் கை கொடுக்காததால் சிறிய இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. இந்த இடைவெளிக்கு பின்னர் அவர் மிகுந்த சிரமத்திற்கிடையே எடுத்திருக்கும் படம் தான் 6.

இந்த படத்தை இயக்குனரை போலவே இன்னொருவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நாயகன் ஷாம். அவரது சினிமா வாழ்வில் மற்ற எந்த நடிகர்களும் செய்யத அளவுக்கு உடலை கேரக்டருக்காக வருத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் ஐடி கம்பெனியில் பணி செய்கிறவராக வருகிறார் ஷாம். அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதனை தீர்க்க அவர் மேற்கொள்ளும் பயணம் தான் 6. ஆறு நகரங்களில் – போபால், கான்பூர், கோவா, கொல்கத்தா, அலகாபாத் மற்றும் லக்னோ – படத்தின் கதை நடக்கிறது.

ஷாமுக்கு படத்தில் ஆறு கெட்டப்புகள். அதில் ஒன்று மிக ஒல்லியான தோற்றம். விக்ரம் ஐ படத்துக்கு இளைப்பதற்கு முன்பே அவரைவிட அதிகமாக உடல் எடையை குறைத்து 6 படத்தில் ஷாம் நடித்தார். இன்னொரு கெட்டப்புக்காக பல நாட்கள் தூங்காமல் கண்ணைச் சுற்றி பை தொங்குகிற அளவுக்கு ஷாம் மெனக்கெட்டிருந்தார். வரும் 20 ஆம் தேதி படம் வெளியாகிறது.