“ஒரு கதை சொல்லட்டுமா” – விமர்சனம்..!

சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றவுடன், கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறுகிறார்.
இதனை பார்க்கும் பணத்தாசை பிடித்த தயாரிப்பாளர் ஒருவர் திருச்சூர் பூரம் திருவிழாவை ஆவணப்படுத்த திட்டமிடுகிறார். ரசூலின் நண்பர் ஒருவர் மூலம், அவரை இந்த ஆவணப்படத்திற்குள் கொண்டு வருகிறார். ரசூலுக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லாவிட்டாலும், நண்பருக்காக ஒப்புக்கொண்டு திருச்சூர் வருகிறார்.
பூரம் விழாவை முழு மனதுடன் ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால் பணத்தாசைப் பிடித்த தயாரிப்பாளர் ஜார்ஜின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஒருகட்டத்தில் பிரச்சினை பெரிதாகி, அந்த புராஜெக்ட்டில் இருந்து விலகிவிடுகிறார் ரசூல். ஆனால் தயாரிப்பாளர் விடுவதாக இல்லை. இறுதியில் திருச்சூர் பூரம் திருவிழாவை ரசூல் ஒலிப்பதிவு செய்தாரா இல்லையா என்பது தான் படம்.
 
ரசூல் பூக்குட்டியின் வாழ்க்கை வரலாறு தான் படத்தின் கதை. ஆனால் அதனை ஒரு ஆவணப்படமாக இல்லாமல், திருச்சூர் பூரம் திருவிழாவை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஒரு டிராமாவாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் பிரபாகர். ரசூலுக்கும், தயாரிப்பாளருக்குமான பிரச்சினை, அதன் பிறகான வில்லத்தனம் என ஒரு முழு நீள சினிமாவாகவே நகர்கிறது படம்.
ஆஸ்கர் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய ரசூல், இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நிஜத்தில் எப்படி நடந்துகொள்வாரோ, அப்படி தான் திரையில் தெரிகிறார். கண் பார்வையற்றவர்களுக்காக அவரது மெனக்கெடல்கள் உருக்கமான காட்சிகளாக இருக்கின்றன. படத்தை வெறும் காட்சிகளாக மட்டும் இல்லாமல், ஒலியால் செதுக்கி இருக்கிறார் ரசூல். ஒவ்வொரு சப்தத்தையும் தனித்தனியாக உணர முடிகிறது.
டைட்டில் கார்டில் பின்னால் ஒலிக்கும் ஆஸ்கர் விருது விழா உரையாடலே, இது என்ன மாதிரியான படம் என்பதை உணர்த்திவிடுகிறது. குறிப்பாக பூரம் திருவிழாவின் சண்ட மேளமும், யானை பிளிரலும், வான வேடிக்கை ஒலியும் அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன. சவுண்ட் என்ஜினியரிங் மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.
மற்றபடி, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர். ரசூல் பூக்குட்டியின் பால்ய வாழ்க்கை பற்றி எல்லாம் படத்தில் காட்டப்படவில்லை. திருச்சூர் பூரம் திருவிழாவையொட்டிய அவரது பயணத்தை மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. ‘ஒரு கதை சொல்லட்டுமா’ ஒரு நல்ல அனுபவம்.

Leave a Response