கூட்டணியா இதெல்லாம் : கொள்கைகளே இல்லாமல் கோடிகளை மட்டுமே நம்பியுள்ள கூட்டணி – சீமான் தாக்கு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“இவங்க இப்போ என்ன சொல்றாங்க, இந்த தேர்தலில் மத சார்பற்ற கூட்டணியும், மதவாத கூட்டணிகள் போட்டியிடுவதாக சொல்றாங்க. ஆனா எல்லாருமே மனிதர்கள்தானே.. நடுவுல வந்த இந்த சாதி, மதத்தை சொல்லி தமிழர்களை பிரிச்சு வெச்சுட்டாங்க. அதனுடைய விளையே, ராமநாதபுரம் தொகுதியில் இந்துவா? முஸ்லீமா? என்று இப்படி ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிட்டாங்க.

சில தலைமுறைகளுக்கு முன்னாடி நம்ம கிட்ட இருந்து மதம் மாறியவர்கள் தான் முஸ்லீம்கள். அவங்க ஒன்னும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது. ஒன்னு சொல்லிக்கிறேன்… தமிழை ஆட்சி மொழியாக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியவர் காயிதேமில்லத் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

காங்கிரஸ் தமிழினத்தின் எதிரி. பாஜக மனித குலத்தின் எதிரி. பதவிக்காக எதையும் செய்யக் கூடிய அ.தி.மு.க., தி.மு.க., ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளனர். கச்சத்தீவு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் இப்படி எதை எடுத்துக்கிட்டாலும், பாஜகவும் காங்கிரசும் ஒரே கொள்கைதான். பாகிஸ்தான் இல்லைன்னு வெச்சுக்குங்க. பாஜகவுக்கு அரசியலே இல்லை.

இந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை. மோடியிடம் இருந்து தான் இந்தியாவை பாதுகாக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸ், பாஜகவும் கொள்கைகளே இல்லாமல் கோடிகளை மட்டுமே நம்பி கூட்டணி அமைத்துள்ளன சீட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட சீட்டணி. இது.. இவர்கள் அமைத்துள்ள கூட்டணி நாட்டை பிடித்துள்ள சனி.

சாப்பிடற சாப்பாட்டுக்குகூட ஜிஎஸ்டி இருக்கு. ஆனா அதானியின் மின்சாரத்திற்கும், அம்பானியின் பெட்ரோலுக்கும் மட்டும் ஜிஎஸ்டி இல்லையாம். 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதன்மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டும் இந்த பாஜக அரசு, மாட்டுக்கறி சாப்பிடும் உள்ளூர் மக்களை அடித்துக் கொல்கிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ் இது ரெண்டும் வலுவா இருக்கு. அதனால ஐயப்பன் மூலமாக உள்ளே நுழைய பாக்குது பாஜக. இவங்க கையில் திரும்பவும் ஆட்சியை தர்றதுக்கு பைத்தியக்காரங்ககூட துணிய மாட்டாங்க..

இந்த ராமநாதபுரம் தண்ணீர் இல்லாத பஞ்ச பூமி. இங்க இருக்கிற பெண்கள் தண்ணிக்காக கற்கால மனிதர்களை விட ரொம்பவே கஷ்டப்படறாங்க. கற்கால மனுஷங்களை போல தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு, ஒரு குவளை குடிநீருக்காக மக்கள் அலைகிறார்கள்.

தாகத்துக்கு தண்ணி தர வேண்டியவங்க, அதானியின் சோலார் பேணல்களை சுத்தப்படுத்த தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதி தந்திருக்காங்க. அதானி மின்சாரம் தயாரிக்க 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து கொடுத்த ஜெயலலிதா, தமிழர்களின் நாகரீகத்தைக் கண்டறிய உதவும் கீழடி ஆய்வுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கவில்லையே ஏன்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் சீமான்.

Leave a Response