8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.

இதன் மூலம், தங்களின் வாழ்வாதாரங்களாக இருந்த விவசாய நிலங்களை இழந்து செய்வதறியாது கலங்கி நின்ற விவசாயிகளுக்கு மகிழ்ச்சியும், மறுவாழ்வும் கிடைத்துள்ளது.

சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் வாரியத்தின் அனுமதியைப் பெற்றப் பிறகு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் அனுமதியைப் பெறாமல் அவசர கதியில் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பசுமை வழிச்சாலைத் திட்டம்: மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்துக்கு, நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கு: இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள் என்று ஏற்கனவே விசாரணையின் போது கேள்வி எழுப்பியருந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை அளித்துள்ளது.

Leave a Response