தேர்தல் முடிந்தவுடன் ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி..!

தேர்தல் முடிந்தவுடன் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பேசிய அவர், மத்தியில் பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சி அமைத்தால் நாட்டையே பட்டா போட்டு விற்று விடுவார்கள் என்று விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் திமுக வெற்றிபெற்றால் அராஜகம் தலைதூக்கும் என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதற்குக் காரணம் திமுக தான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவரும் பிரதமர் ஆகும் கனவில் உள்ளதாகவும் பேசினார்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம் என்று உறுதி அளித்த முதலமைச்சர் பழனிசாமி, மத்தியில் பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை; மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை தொடர்ந்து செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். தேர்தல் மூலம் அதிமுக ஆட்சியை கலைக்க துடிக்கும் திமுகவிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிந்தவுடன் ஏழைகளுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

Leave a Response