ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

கஜா புயலினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.இதற்காக ரூ.1,200 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் இதில் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இன்று முதல் மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக, ரூ.2,000 செலுத்துவதை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ‘தொழிலாளர்களுக்கு ரூ.2,000 அளிப்பது தேர்தல் ஆதாயத்திற்கு வழிவகுக்கும். தேர்தலுக்கு பணம் கொடுப்பது போன்று உள்ளது. மக்களிடம் வங்கி விபரங்களை பெறுவதற்கு கொடுக்கப்படும் மனுக்களை பல்வேறு பகுதிகளில் அதிமுவினர் தான் வழங்கி வருகின்றனர். எனவே ரூ.2,000 வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றுசென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில், ரூ.2,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு நகல் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றகொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Response