தில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்..!

தங்களது ஸ்டைலில் கலாய் கலாய் என கலாத்து பேயையே அலற வைத்திருக்கிறார்கள் இயக்குநர் ராம்பாலாவும், சந்தானமும். போதாக்குறைக்கு அவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும் சேர்ந்துகொள்ள, கேட்கவா வேண்டும் தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

ஆட்டோ டிரைவர் சந்தானமும், அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து செய்யும் கலாட்டாவால் அல்லோகலோலப்படுகிறது அவர்களின் குடியிருப்பு காலனி. இதனால் கடுப்பாகும் மற்ற குடியிருப்புவாசிகள், இருவரையும் காலி செய்ய சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தான், நாயகி ஸ்ரித்தா சிவதாஸிடம் யாராவது ‘ஐ லவ் யூ’ சொன்னால் உடனே அவர்களை ஒரு பேய் அடித்து உதைத்து வெளுத்து வாங்கிவிடும் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. எப்படியாவது சந்தானத்தையும் அந்தப் பேயிடம் சிக்க வைத்துவிட வேண்டும் என அவர்கள் திட்டம்போட, கடைசியில் பாவம் பேய் தான் சந்தானத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க மீண்டும் அதே பழைய சந்தானமாகவே திரும்பி வந்துவிட்டார்.  இந்த படத்தில் நல்லாவே டான்ஸ் ஆடி, சண்டை போட்டு நடித்திருக்கிறார். வழக்கம் போல தனது கவுண்டர் வசனத்தால், ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை படத்தில் வரும் எல்லோரையும் கலாய்த்து தள்ளி விடுகிறார்.

பல படங்களுக்கு பிறகு இந்த படத்தில் தான் மொட்டை ராஜேந்திரனுக்கு காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. இடையில் கொஞ்சகாலம், ‘நான் காமெடியனா இல்லை கேரக்டர் ஆர்ட்டிஸ்டா?’ என அவரே குழம்பிப் போகும் அளவிற்கான படங்கள் பலவற்றில் அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் மீண்டும் தன் டிரேட் மார்க் காமெடியைத் தந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த ‘ஓ.பி.யா’ காமெடியும், கதவு சீனும், தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு கூட நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.

இந்தக் கூட்டணியில் இரண்டாம் பாதியில் ஊர்வசியும், ஜெயபிரகாஷ் பிபின், பிரஷாந்த் ராஜ் கூட்டணியும் இவர்களுடன் இணைந்து கொள்ள, ‘போதும் பா வயிறு வலிக்குது’ என கெஞ்சும் அளவிற்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார்கள்.

சந்தானத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இயக்குனர் ராம்பாலாவுக்கு மட்டுமே தெரிந்த வித்தைபோல. மிகவும் தூக்கியும் வைக்காமல், அதேசமயம் அவரிடம் வாங்க வேண்டிய விஷயத்தை சரியாக வாங்கியும் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு சிரித்து மகிழ ஒரு படம் எடுத்ததற்காகவே ராம்பாலாவுக்கு தனி பாராட்டுகள்.

என்ன தான் இருந்தாலும் பேயை கலாய்ப்பதற்கு ஒரு அளவு இல்லயா. பேய் எல்லாம் பாவம் ராம்பாலா சார். பேய்களுக்கு மட்டும் ஒரு சங்கம் இருந்திருந்தால், இந்நேரம் ஒரு பெரிய போராட்டமே வெடித்திருக்கும். சைட் கேப்பில், மந்திரவாதிகளையும், சாமியார்களையும் கூட கலாய்த்திருக்கிறார்கள்.

ஹீரோயின் ஸ்ரித்தா சிவதாஸ் அழகு பொம்மையாக மிளிர்கிறார். படத்திலும் கேரள பெண்ணாகவே வருவதால், ரொம்ப கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார். நிறைய படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

‘மவனே யாருகிட்ட’, ‘காத்தாடி போல் ‘ என இரண்டு பாடல்கள் தான் படத்தில். ஷபிர் இசையில் இரண்டுமே கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஒரு பேய் – காமெடி படத்துக்கு தேவையான பின்னணி இசையை கச்சிதமாக தந்திருக்கிறார். தேவையில்லாமல் பாடல்களைத் திணித்து திரைக்கதையைக் கெடுக்காமல் இரண்டே பாடல்களைத் தந்திருப்பது நலம்.

ஒரு ஹாரர் படத்துக்கு தேவையான காட்சிகளை, சரியாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி. மாதவனின் படத்தொகுப்பு, படத்தை போரடிக்க விடாமல் கொண்டு செல்கிறது.

 

Leave a Response