சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட “கனா” சிறப்பு காட்சி..!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆன படம் கனா. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி கனா படக் கதையை இயக்கி இருந்தார் அருண்ராஜா காமராஜா.
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் விவசாயிகளின் அவல நிலையும், பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலும் அலசப்பட்டது.
பொது மக்கள் மத்தியிலும் இந்த கனா படம் மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தை சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் உள்ள மைத்ரி சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு திரையிடலாக சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டது.

இந்த சிறப்பு காட்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பட நிறுவனத்தின் சார்பில் அவரின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ஏற்பாடு செய்திருந்தார்.

தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் இருந்து செயிண்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை குமரேசன், ஹரி, தயாரிப்பாளர் கசாலி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த சிறப்பு காட்சியை பார்த்த பின் மைத்ரி ஸ்பெஷல் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா கூறியதாவது:

எங்கள் சிறப்பு குழந்தைகளுக்கு கனா படம் திரையிட்டு காட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அதற்காக பல உதவிகள் செய்த மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எங்கள் குழந்தைகள் படத்தை ரொம்ப ரசித்தார்கள். ஒரு புதிய அனுபவமாக ஸ்பெஷல் குழந்தைகளுக்கு இந்த அனுபவம் இருக்கும்.  குறிப்பாக பிரசாத் லேப் நிர்வாகத்துக்கு நன்றி சொல்லுகிறோம். சிறப்பு குழந்தைகளுக்கு நல்ல முறையில் எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு கீதா கூறினார்.

Leave a Response