முடிவுக்கு வந்தது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு..!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாகசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்துள்ளது.

சுகாதாரத்துறை தொடர்பான விழிப்புணர்வு பேரணியின் போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

மோட்டார் வாகனச் சட்டத்தை மீறும் வகையில் உரிய உரிமம் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தை ஓட்டியது குற்றம். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வுக்கு முன்பாக நடைபெற்ற விசாரணையில், ‘விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சென்றபோது அவசரத்தில் ஹெட்மெட் அணிய முடியாமல் போனதாகவும், இனிமேல் இதுபோல நடக்காது எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Response