“சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு..!

‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது:
சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும். இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை  சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார். அவரை தயாரிப்பாளரின் இயக்குனர் என  உறுதியாக சொல்வேன்” என்றார்.
முக்கிய வேடத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி பேசும்போது:
இதில் பள்ளி செல்லும் குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளேன். ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை இந்த படம் அழகாக சொல்கிறது. இக்கட்டான நேரத்தில் ஒரு மனிதன் எந்த மாதிரியான முடிவை எடுக்கிறான் என்பதை இந்த படம் விறுவிறுப்பாகச் சொல்கிறது” என கூறினார்.
கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது:
ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கு 3000 தியேட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சின்ன படத்திற்கு 3 தியேட்டர்கள் தான் கிடைக்கின்றன இதுதான் இன்றைய சினிமாவின் அவல நிலை. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நான் பேசி உள்ளேன். பெரிய பட தயாரிப்பாளர்களுக்கு சிறிய பட தயாரிப்பாளர்களின் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து மற்றவர்களுக்கும் அவர்கள் வழி விட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். கன்னடத்தில் படம் எடுத்தால் அரசாங்க 10 லட்சம் தருகிறது.. அதேபோல இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் வரும். இந்த அரசாங்கம் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்” என்றார் உணர்ச்சி பொங்க.

Leave a Response