சபரிமலை விவகாரம் : 3 கி.மீ தூரத்திற்கு தீபம் ஏந்தி பெண்கள் போராட்டம்..!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககூடாது எனக் கோரி பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

அதே நேரம், சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால், மோதல் முற்றியது.

சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் மீண்டும் போராட்டங்கள் தலைதுக்கி உள்ளன. கன்னியாகுமரி முதல் கேரளா மாநிலம் காசர்கோடு வரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் கைகளில் அகல் விளக்கு ஏந்தி சரண கோஷமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகரும், எம்பியுமான சுரேஷ்கோபி களியக்காவிளையில் தொடங்கி வைத்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சபரிமலை புனிதம் காப்போம் என்ற முழக்கமிட்டனர்.

இதே போல், நாகர்கோவில் பகுதியில் சாலையோரங்களில் பெண்கள் தீபம் ஏந்தி வழிபாடு நடத்தினர். சபரிமலை கர்ம சமிதி கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த தீப போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், பெண்கள் கையில் திருவிளக்கு ஏந்தி 3 கி.மீ தூரத்துக்கு பிரார்த்தனை ஊர்வலம் நடத்தினர். வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கும்பகோணம் சாலையில் உள்ள திருநந்தவனத்திற்கு அருகே முடிவடைந்தது.

கடந்த 23 ம் தேதி இளம்பெண்களுடன் சபரிமலைக்கு வந்த சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினரால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர் எதிர்ப்பால் பெண்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மேலும், இரு தினங்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த இருபெண்கள் யாருக்கும் தகவல் அளிக்காமல் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை அனுமதிக்காமல் ஆண் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பபட்டனர்.

Leave a Response