தொலைத்தொடர்பு சாதனங்களை கண்காணிக்கும் மத்திய அரசு : இனி உங்க கம்ப்யூட்டர்ல என்ன இருந்தாலும் அரசுக்கு தெரியும்..!

நாட்டில் உள்ள எந்தவொரு கம்ப்யூட்டர் தரவுகளையும் (டேட்டா) குறுக்கிடவும், கண்காணிக்கவும், கண்டறியவும், வேவு பார்க்கவும் 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த ‘கெசட்’ அறிவிப்பை நேற்றுமுன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் கம்ப்யூட்டர் குற்றம், தகவல் பாதுகாப்பு பிரிவுக்காக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் காபா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த ‘கெசட்’ அறிவிப்பின்படி கம்ப்யூட்டர்களை உளவு பார்க்கும் அதிகாரம் பெற்றுள்ள 10 அமைப்புகள் விவரம் பின்வருமாறு:-

1. உளவு அமைப்பு (ஐ.பி.) 2. போதைப்பொருள் தடுப்பு அமைப்பு 3. அமலாக்க இயக்குனரகம் 4. மத்திய நேரடி வரிகள் வாரியம். 5. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 6. சி.பி.ஐ. 7.தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 8. மத்திய மந்திரிசபை செயலகத்தின் கீழ் செயல்படும் ‘ரா’ உளவுப்பிரிவு ( ‘ரா’ என்னும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) 9. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அசாமில் செயல்படுகிற சமிக்ஞை புலனாய்வு அமைப்பு 10. டெல்லி போலீஸ் கமிஷனர்.

இந்த 10 அமைப்புகளுக்கு 2000-ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் கம்ப்யூட்டர்களை வேவு பார்க்க முடியும்.

கம்ப்யூட்டரில் அனுப்பப்படுகிற தகவல்களை (இ-மெயில்கள், சமூக வலைத்தள பதிவுகள் உள்ளிட்டவை) இடைமறிக்க முடியும். தகவல்களைக் கண்டறிய முடியும். சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்ய முடியும். இத்தனை அதிகாரங்களும் 10 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Response