விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ – விமர்சனம்..!

அ ழிந்து போன நாடகக் கலையை மக்களுக்கு ஞாகப்படுத்தும் விதமாகவும், விஜய் சேதுபதியின் 25-வது படம் என்கிற பெருமையோடும் வந்திருக்கும் படம் தான் இந்த ‘சீதக்காதி’.

நாடகமே உயிராகக் கொண்டு பெயரோடும், புகழோடும் வாழ்ந்து வருபவர் அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி). கால மாற்றங்களில் அந்த நாடகக் கலைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போய், அதுவே அவருக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை கொடுக்கிறது.

அந்த வறுமையான நிலையிலும் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தும் அதை மறுத்து, வாழும் வரை மக்கள் முன்னால் நேரடியாக நடிப்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு நாடகங்களை நடத்தி வருகிறார். ஒருநாள் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்து விடுகிறது.

போனது உயிர் தான் அவரது ஆன்மா இல்லை என்று நம்புகிறார்கள் அவரது நாடகக்குழுவில் இருப்பவர்கள். அதன் விளைவாக திரைப்படங்களில் நடிகர்கள் வடிவில் மறைமுகமாக நடிக்கத் தொடங்குகிறார் ஆதி மூலம். அது எப்படி நடக்கிறது? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அது எப்படி தீர்கிறது? என்பதே மீதிக்கதை.

” சினிமா என்கிற அற்புதமான மக்கள் கலைக்கு என்றைக்குமே அழிவில்லை. ஆனால் அது வியாபாரிகளில் கைகளில் செல்வதால் அதன் இயல்புத் தன்மையை இழக்க ஆரம்பித்திருக்கிறது” என்பதையே இந்தப் படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

75வயது முதியவர் ஐயா ஆதிமூலம் கேரக்டரில் வருகிறார் விஜய் சேதுபதி. நாடகங்களில் விதவிதமான வேடம் கட்டி குரல், உடல் மொழிகளில் அவர் காட்டும் கச்சிதம் அபாரம்.

குறிப்பாக ஒளரங்கசிப் நாடகத்தில் 8 நிமிடங்கள் ஓடும் சிங்கிள் ஷாட் காட்சியில் தனது நடிப்பாற்றலை மிக அற்புதமாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். படத்தின் தொடக்கமாக அவர் சம்பந்தப்பட்ட முக்கால் மணி நேரம் வருகிற காட்சிகள் கிட்டத்தட்ட ‘காவியத் தலைவன்’ பட எபெக்ட்டில் நகர்கிறது.

அதன்பிறகு அவர் ஆன்மா ராஜ்குமார், சுனில் போன்றவர்களின் உடம்புக்குள் புகுந்தவுடன் திரைக்கதை நகர்வு காமெடியாக டேக்-ஆப் ஆகிறது. நாடகக் கலையின் தனித்துவத்தையும் மக்களுக்கு சொல்ல வேண்டும், அதே சமயம் படத்தை காமெடியாகவும் கொண்டு செல்ல வேண்டுமென்று இயக்குனர் செய்த வித்தியாசமான திரைக்கதை மெனக்கிடலுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

ராஜ்குமார், பகவதி பெருமாள், டி.கே, சுனில் இந்த நான்கு கேரக்டர்களை வைத்து புதுமுகங்களை ஹீரோவாக்கி படமெடுக்கும் இயக்குனர்கள் படும் பாட்டை காட்சிகளாக்கி காமெடியில் தியேட்டரை அதிர வைக்கிறார்கள். அதிலும் இடைவேளைக்குப் பிறகு வரும் சுனில் அடக்க முடியாத சிரிப்பை ரசிகர்களுக்கு தன் அசால்ட்டான நடிப்பால் தந்திருக்கிறார்.

மெளலி, அர்ச்சனா, கருணாகரன், மகேந்திரன், பாரதிராஜா, ராம் என படத்தில் வருகிற அத்தனை பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள். காயத்ரி, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் ஹெஸ்ட் ரோலில் வந்தாலும் நினைவில் நிற்கிறார்கள்.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், டி.கே.சரஸ்காந்த்தின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் காட்சிகளை வேகப்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றுகிற அளவுக்கு மெதுவாக நகர்கின்றன காட்சிகள்.

‘நல்ல கதையம்சம் உள்ள படங்களை மக்கள் எப்போதுமே பார்க்கத் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் தான் அந்த உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்’ என்ற கருத்தை படத்தில் துணிந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

மெதுவாக நகரும் காட்சிகள், படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கும் இந்த இரண்டு சமாச்சாரங்களையும் சரி செய்திருந்தால் பொறுமையோடு உட்கார்ந்து சிரித்து சிரித்து ரசிக்கக் கூடிய விறுவிறுப்பான படம் தான் இந்த ‘சீதக்காதி’.

Leave a Response