குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று சிபிஐ விசாரணை..!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, குட்கா ஆலை அதிபர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தது.

அதே போல் குட்கா ஊழல் நடந்ததாக கூறப்படும் காலத்தில் சென்னை காவல்துறையில் துணை ஆணையராக பணியாற்றிய ஜெயக்குமார், ஆய்வாளராக பணியாற்றிய சம்பத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave a Response