விவசாயிகளுக்கு பேரிழப்பு : நெல் ஜெயராமனுக்கு தலைவர்கள் அஞ்சலி..!

நெல் ஜெயராமனின் இறப்பு விவசாயிகளுக்கு பேரிழப்பு என முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

174 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியவர். மரபு வகை விதை மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்.

கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜெயராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெல் ஜெயராமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அது போல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது காமராஜ் கூறுகையில் நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உருதுணையாக இருக்கும்.

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். விவசாயிகளின் பாதுகாவலர்களாக தமிழக அரசு விளங்குகிறது என்றார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், எம்எல்ஏ தனியரசு, நடிகர் கார்த்தி, ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் நெல்ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். நெல்ஜெயராமனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்று தெரிவித்தார்.

Leave a Response