கஜா பாதிப்பு : பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, தஞ்சையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை விமானப் படை தளத்திற்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கிருந்து கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் ஆய்வு செய்து, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து தோப்புத்துறை பகுதிக்குச் சென்ற அவர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அவரோடு, பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்‌பட்ட அவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வந்தடைந்தார். அவரிடம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனுவை அளித்தார். புயலால் பாதித்த மக்களுக்கு மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் ஒரு லட்சம் வீடுகளை கட்டித்தர மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் விண்ணப்பிக்க, வரும் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கோரிக்கை விடுத்தால் கஜா புயல் நிவாரணப் பணிகளில் ராணுவத்தை அனுப்பத் தயாராக இருக்கிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Response