மேகதாது அணைக்கு எதிர்ப்பு : டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் – திமுக தலைவர் ஸ்டாலின்..!

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாது திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில், இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “நேரம் இல்லாத காரணத்தால் மற்ற கட்சிகளை அழைக்க முடியவில்லை.

இந்த கூட்டத்தில் கஜா புயலினால் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் எழுந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மேகதாது அணை தொடர்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருச்சி மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கட்சி பேதங்களை மறந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். டெல்டா பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் திருச்சியில் நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆர்பாட்டத்திற்கு வர பாஜக விரும்பினால் வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.

Leave a Response