“மன்னிப்பு கேட்க முடியாது” – தமிழக அரசுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்..!

சர்கார் பட பிரச்சனைக்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குனர் முருகதாஸ் அதிரடியாக கூறியிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகிய ‘சர்கார்’ திரைப்படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு அரசியல் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பவே குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டது.

சர்கார் படப்பிரச்சனை சம்பந்தமாக முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 9 ந் தேதி முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முருகதாஸை 27ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே 27ந் தேதியான நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதித்த வழக்கறிஞர், முருகதாஸ் சர்கார் படத்தில் அரசியல் கட்சிகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் அரசையோ அரசியல்வாதிகளையோ விமர்சித்து படம் எடுக்க மாட்டேன் என பத்திரத்தில் கையெழுத்து போட்டுத்தர வேண்டும் என கூறினார். இதனை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து முருகதாஸ் நாளை விளக்கமளிக்க வேண்டும் என கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று முருகதாஸ் சர்கார் படத்திற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாதென்றும், அதற்கான அவசியமும் இல்லை எனவும் தடாலடியாக தெரிவித்துள்ளார்.

Leave a Response