ரூ.15ஆயிரம் கோடி: கஜா புயல் நிவாரணமாக பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தகவல்..!

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 15,000 கோடி நிதியுதவி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். இதனையடுத்து புயல் பாதிப்பு நிவாரண நிதியை பிரதமரிடம் கோருவதற்காக முதலமைச்சர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்து பேசினார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை உடனிருந்தனர். பிரதமர்- முதலமைச்சர் சந்திப்பு சுமார் 30 நிமிடம் வரை நடைபெற்றது.

பிரதமர் உடனான சந்திப்பிற்கு பின் டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கஜா புயல் பாதிப்பு குறித்த விவரங்களை கணக்கிட்டு அதுதொடர்பான அறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளேன். கஜா புயல் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 1,500 கோடி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது. மொத்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூபாய் 15,000 கோடியை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளேன். அத்துடன் புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக ஆய்வை மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். பிரதமரும் மத்தியக் குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 63 பேர் உயிரிழந்ததுள்ளனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத் தான் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் நிஷா புயலின்போது கொடுக்கப்பட்ட நிவாரணத்தை விட கஜா புயல் பாதிப்பிற்கு அதிமுக அரசு அதிக நிவாரணத்தை கொடுத்துள்ளது.

சாலை மார்க்கமாக சென்ற ஸ்டாலினால் எத்தனை இடங்களை ஆய்வு செய்ய முடிந்தது..? ஹெலிகாப்டர் மூலமாக சென்றதால் தான் டெல்டா மாவட்டங்களில் சேத விவரங்களை முழுமையாக தன்னால் தெரிந்து கொள்ள முடிந்தது” என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Response