பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் வேண்டும் : கமல்ஹாசன் ஆவேச பேச்சு..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் , தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கமல் பேசுகையில், “சினிமா துறையில் இருந்த நான் யதார்த்த வாழ்வில் அரசியலுக்கு வந்துள்ளேன். உங்களை நம்பி தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை கரை சேர் பீர்கள் என்று நம்புகிறேன்.

வாக்களிக்க பணம் வாங்க மாட்டேன் என்று பெரும்பாலான மக்கள் என் முதல் முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை போன்று மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தால் , தமிழகத்தில் பல மாற்றங்களை என்னால் கொண்டுவர முடியும்.

மேலும் உழைக்கும் மக்களின் பணம் தான் அரசு கஜானாவில் உள்ளது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் வீனாக்குகின்றனர். அரசு கஜானாவை காலி செய்கின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மக்களுடைய பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து, அதன் ஒரு பகுதியை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை பெறுவதற்காக, அவர்களுக்கே கொடுத்து ஏமாற்றும் கலாச்சாரம் பரவி வருகிறது. இந்த கலாச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் முடிவுக்கு கொண்டு வரும்.

‘பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் வேண்டும், உழைக்கும் மக்களுக்கு இந்த தேவையில்லாத இலவசங்கள் வேண்டாம்’. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கு தனிப்படை அமைக்க உள்ளோம்.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும், உள்ளாட்சி தேர்தலும் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை . இதில் எந்த தேர்தல் வந்தாலும், அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்” இவ்வாறு பேசினார்.

Leave a Response