ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு : மீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. காவிரி குறித்து ரஜினி பேசியதால் எப்போது ரஜினி படம் கர்நாடகத்தில் திரையிடப்பட்டாலும் அதற்கு எதிராக வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் போராட்டம் நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் பெங்களூருவில் பிற மொழி படங்கள் அதிகளவில் வெளியாவதால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 திரையிடப்படுகிறது.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது வாட்டாள் நாகராஜ் மேளம் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னட படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. கன்னட திரையுலகை பாதுகாக்க வேண்டுமென்றால், அனைத்து திரையரங்குகளிலும் கன்னட படத்தை திரையிட வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளிவருகிறது. இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார் வாட்டாள் நாகராஜ்.

Leave a Response