20 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் : கமல்ஹாசன் அறிவிப்பு..!

20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி கமல்ஹாசனின் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கம் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நிதி மய்யம் தயாராக உள்ளதாக கூறினார். ஊழலற்ற, சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளதாக கூறிய அவர், தேர்தலின்போது பணம் கொடுக்கும் முறைகேட்டை மாற்ற மக்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமியை மாற்றவேண்டும் என ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை, பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனையடுத்து அந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளன. அதேபோல திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி, மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் மரணம் காரணமாக அந்த தொகுதிகளும் எம்எல்ஏக்கள் இல்லாமல் காலியாக உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் 20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Response