நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடக ஐகோர்ட் அதிரடி..!

நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் பாலியல் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நிபுணன் படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிகரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்தார். இது கர்நாடகம், தமிழகம் என இரு மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுகுறித்து அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இரு தரப்பையும் அழைத்து பேசுகிறோம் என சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அர்ஜூன், “நான் சமசரம் செய்து கொள்ள மாட்டேன், என் மீது அவர் எப்படி பாலியல் புகார் அளிக்கலாம்? ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்” என்று சொல்லி அது சம்பந்தமான நீதிமன்ற பணிகளிலும் அதிரடியாக இறங்கினார்.

ஸ்ருதி ஹரிஹரன் நேராக பெங்களூரு போலீசில் போய் நடிகர் அர்ஜூன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல், பெண்களை அவதூறு செய்வது, மிரட்டல், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் நடப்பது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் இதையடுத்து தன் மீதுதொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் அர்ஜுன் மனு தாக்கல் செய்தார். அதேபோல, அர்ஜூனின் வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, படத்தில் இணைந்து நடித்த காட்சிகளை கொண்டு இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பொய்யான புகாரின் அடிப்படையிலேயே வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அர்ஜூன் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் அர்ஜூனை நவம்பர் 14-ந் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதே சமயத்தில் இது சம்பந்தமான போலீசாரின் விசாரணைக்கு எந்தவித தடையும்இல்லை என்று நீதிபதி தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதுவரை அளிக்கப்பட்டுள்ள மீ டூ விவகாரங்களில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் – அர்ஜூன் சம்பந்தப்பட்ட புகார் மீது தான் அடுத்தடுத்து நடவடிக்கை உடனடியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response